search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்குர்ஆனின் சிறப்பு
    X

    திருக்குர்ஆனின் சிறப்பு

    திருக்குர்ஆன் இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேதமாகவும், மனித குலத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
    திருக்குர்ஆன் இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேதமாகவும், மனித குலத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் விளங்குகிறது.

    “இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம் மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங் களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதில் இருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக” (திருக்குர்ஆன்-38:29) என்றும்,

    “இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையே அன்றி வேறில்லை” (திருக்குர்ஆன்-68:52) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

    குர்ஆன் எல்லாச் செய்திகளையும் எளிமையாக எடுத்துச் சொல்கிறது. பல்வேறு காலங்களில் இந்த உலகில் அவதரித்த இறைத்தூதர்கள் பற்றிப் பேசுகிறது. மனிதன் படைக்கப்பட்ட விதத்தை அது பறைசாற்றுகிறது. இயற்கையின் ஆற்றல்களை அது எடுத்துரைக்கிறது. கடந்த கால சமுதாயங்களின் வரலாறுகளை அது விவரிக்கிறது. அழிந்துபோன சமுதாயங்களின் நிலைமைகளைப் பார்க்கும்படி கூறி அச்சமூட்டி எச்சரிக்கிறது.

    அன்றைய அரேபியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்திராத பல அறிவியல் உண்மைகளைக் குர்ஆன் துல்லிய மாகக் கூறுகிறது. இன்றைய விஞ்ஞான உலகம் குர்ஆனின் குரல் உண்மை என்பதை உரக்க உரைக்கிறது.

    உலகத்தில் உள்ள எல்லா மதங்களில் உள்ள வேத நூல்களும் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களால் ஓதப்படுகின்றன. சில சிறப்பான வேளை மற்றும் பண்டிகையின்போது ஓதுகின்ற வேதங்களாக அவை உள்ளன. ஆனால் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ஓதக்கூடிய ஒரே திருமறை, திருக்குர்ஆன்தான். ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகை நடைபெறும்போது பள்ளிவாசல்களில் திருக்குர்ஆனின் வசனங்கள் ஓதப்படுகின்றன. நாட்டுக்கு நாடு நேரம் வேறுபடுவதைக் கணக்கிட்டுப் பார்த்தால் 24 மணி நேரமும் ஓதப்படுகிற திருமறையாகத் திருக்குர்ஆன் திகழ்வதைக் காணலாம்.

    பிற மதங்களுக்குரிய வேதங்கள் பல நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அந்தந்த நாடுகளில் அந்தந்த மொழிகளிலேயே ஓதப்படுகிறது. ஆனால் மூல மொழியான அரபி மொழியிலேயே ஓதப்படுகிற ஒரே மறை, திருக்குர்ஆன்தான். திருக்குர்ஆன் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அது ஆங்கிலமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் அரபி மொழியும் இடம் பெற்றிருக்கும். அரபி மொழி இல்லாத தொகுப்புகளைப் பார்ப்பது அரிது.

    இந்த உலகத்தில் அருளப்பட்ட எந்த வேத நூலுக்கும் இல்லாத சிறப்பு திருக்குர்ஆனுக்கு உண்டு. 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டு, அது எந்த வரிசைப்படி தொகுக்கப்பட்டதோ, அதே வரிசைப்படி ஒரு புள்ளிகூட மாறாமல்- மாற்றப்படாமல் இன்று வரை இருக்கிறது.

    இதற்குக் காரணம், அதைப் பாதுகாத்துக் கொள்கிற பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டு விட்டான். “நிச்சயமாக நாம்தான் (உம்மீது) இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். ஆகவே (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாத்துக் கொள்வோம்.” (திருக்குர்ஆன்-15:9) என்று இறைவன் கூறுகின்றான்.

    நடையழகு கொண்டு இறைவனால் மொழியப்பட்ட நூல், திருக்குர்ஆன். அது கவிதையும் அல்ல; வசனமும் அல்ல. இவ்விரண்டுக்கும் உயர்ந்த நிலையில் இருப்பது. திருமறை வசனங்கள், ஓதுகிறவர்களை மட்டுமல்ல; அதைக் கேட்பவர்களையும் கட்டிப் போடும் சக்தி கொண்டது.

    “குர்ஆனின் மாபெரும் வலிமை அதன் கொள்கைகளில் மட்டுமல்ல; அதன் விந்தை மிகு ஓசை நயத்திலும் உள்ளது.” என்றார், ஒரு மேலை நாட்டு அறிஞர்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்வேன் என்று சூளுரைத்து, உருவிய வாளுடன் உமர் (ரலி) சென்றார். வழியில் அவருடைய தங்கை பாத்திமாவும், அவருடைய கணவரும் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி கிடைத்ததும் கோபத்துடன் தங்கையின் வீட்டுக்குப் போனார். அப்போது தங்கை ஓதிய குர்ஆன் வசனத்தைக் கேட்டு மனம் மாறி உமர் இஸ்லாத்தைத் தழுவினார்.

    குரைஷிகளின் கொடுமையைத் தாங்க முடியாமல் முஸ்லிம்கள் அபிசீனியா நாட்டுக்குச் சென்றனர். அவர்களுக்கு எதிராக மன்னர் நஜ்ஜாஜியிடம் குற்றம் சாட்டினர், குரைஷிகளின் தூதர்கள். மன்னரோ கிறிஸ்தவர். ஈசா நபி பற்றிய கொள்கையில் முஸ்லிம்கள் முரண்படுவதாகச் சொல்லி ஒரு தர்ம சங்கடமான நிலையை உருவாக்கினார்கள். அப்போது முஸ்லிம் குழுவின் தலைவர் ஜஅபர் இப்னு அபூதாலிப் திருக்குர்ஆனில் அந்தப் பகுதியை ஓதிக் காட்டினார். அப்போது குர்ஆன் வசனங்கள் மன்னரை வசப்படுத்தியது. மன்னர், “இதில் தவறேதும் இல்லை. முஸ்லிம்கள் விரும்பும் வரை என் நாட்டில் இருக்கலாம்” என்றார். பின்னர் சில நாட்களில் அவரே இஸ்லாத்தைத் தழுவினார் என்பது வரலாறு.

    “இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இது பதிந்து விடும்.” (திருக்குர்ஆன்-29:49) என்ற இறைமொழிக்கு ஏற்ப ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் இதயங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகிற ஒரு வேதமாக திருக்குர்ஆன் திகழ்கிறது. நபிகளார் காலத்திலேயே அதைப் பலரும் மனப்பாடம் செய்தனர். அப்போது திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் இருந்தனர். அதன் பின்னரும் இந்த நிலை தொடர்ந்தது. திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்பவர் களுக்கு ‘ஹாபிழ்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இப்போது உலகம் முழுக்க குர்ஆனை மனனம் செய்தவர் களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும்.

    இன்றைய தினம் உலகில் ஒரு திருக்குர்ஆன் பிரதிகள்கூட இல்லை என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். மறுகணமே சில மணி நேரத்தில் ஒரு எழுத்துக்கூட மாறாமல் திருக்குர்ஆன் உருவாகி விடும். அழிக்க முடியாத ஒரு வேதமாக- லட்சக்கணக்கான மக்கள் உள்ளத்தில் உள்ள ஒரு வேதமாக இருக்கும் பெருமை இவ்வுலகில் திருக்குர்ஆனுக்கு மட்டுமே உண்டு.
    Next Story
    ×