search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்லாலும் சொல்லாலும் காயம்பட்ட நபி பெருமானார்
    X

    கல்லாலும் சொல்லாலும் காயம்பட்ட நபி பெருமானார்

    நபி முஹம்மது (ஸல்) அவர்களை, தாயிஃப் நகரத்துத் தலைவர்கள் அவமதித்தாலும் அந்நகரத்து மக்கள் இஸ்லாமை ஆதரிப்பார்கள் என்று நம்பினார்கள் நபிகளார்.
    நபி முஹம்மது (ஸல்) அவர்களை, தாயிஃப் நகரத்துத் தலைவர்கள் அவமதித்தாலும் அந்நகரத்து மக்கள் இஸ்லாமை ஆதரிப்பார்கள் என்று நம்பினார்கள் நபிகளார்.

    தாயிஃப் நகரத்து மக்களிடமும் மற்ற தலைவர்களிடமும் ஏகத்துவத்தை எடுத்துரைத்தார்கள் நபிகளார். ஆனால் யாருமே செவிமடுக்கவில்லை. இஸ்லாமை யாரும் ஏற்கவில்லை. இஸ்லாமை ஏற்காதவர்கள் நபிகள் நாயகத்தை உடனே அந்நகரத்தைவிட்டு வெளியேறச் சொன்னதோடு, கடுமையான வார்த்தைகளால் பழித்துப் பேசி, நபிகளாரின் மீது சிறு கற்களை வீசினர்.

    நபிகளாரின் மென்மையான மேனியிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்டு ஆனந்தமடைந்தவர்களாகத் தொடர்ந்து சரமாரியாகக் கற்களை எறிந்து பெரிய காயங்களை ஏற்படுத்தினர். இரத்தம் சொட்டி நபிகளாரின் காலணி நனைந்து அவர்களால் நடக்கவும் முடியாமல் தடுமாறினார்கள். நபிகளாருடன் சென்ற ஸைத் இப்னு ஹரித்தா தாக்குதலைத் தடுக்க முயன்றார். நபிகள் நாயகத்தைக் காக்க தன்னையே கேடயமாக்கிக் கொண்டார். அதனால் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் அடித்து ஊருக்கு வெளியே துரத்தினர்.

    அங்கிருந்து வெளியேறியவர்களாகத் தாயிஃபிலிருந்து சில மைல்கள் தொலைவிலுள்ள ஒரு திராட்சை தோட்டத்து நிழலில் அமர்ந்தனர். மன வேதனையோடும், உடல் காயங்களோடும் நபி முஹம்மது (ஸல்), “யா அல்லாஹ்! கருணையாளர்களிலெல்லாம் மிகப் பெரிய கருணையாளனே! எளியோர்களைக் காப்பவனே! என்னுடைய பலவீனத்தை நான் உன்னிடமே முறையிடுகிறேன்.

    உனக்கு என் மீது கோபம் இல்லையென்றால், இது வெறும் சோதனையென்றால் நான்படும் எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொள்வேன். என் வலிகளைப் பொருட்படுத்தவே மாட்டேன். ஆனால் நீ என் மீது கொண்ட கோபத்தின் வெளிப்பாடே நான்படும் துன்பமென்றால் அத்தகைய கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது ஏற்படுவதிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன். எல்லாப் பகைவர்களிடமிருந்தும் என்னைக் காத்தருள்வாயாக.

    என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடம் என்னை ஒப்படைத்துவிடாதே. நீயே பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். நீ வழங்கும் நற்சுகத்தை எதிர்பார்க்கிறேன், அதுவே விசாலமானது. உனது ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்து இம்மை மறுமை சீர்பெற்றன. அப்படியான உனது ஒளியின் பொருட்டால் உனது கோபத்திலிருந்து முழுமையான பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருளால் மட்டுமே முடியும். என் பாவங்களை மன்னிப்பாயாக” என்று கண்ணீர் மல்க அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்தித்தார்கள்.

    தாயிஃப் நகரத்து மக்கள் இஸ்லாத்தை ஏற்காததோடு நபிகளாருக்கு தந்த இந்த வேதனையே நபிகளாரின் வாழ்வில் சந்தித்த துன்பங்களிலேயே  மிகக் கடுமையானது என்று நபி முஹம்மது (ஸல்) அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

    (ஸஹீஹ் புகாரி 3:59:3231, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×