search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தியாகத்தின் சிறப்புகள்
    X

    தியாகத்தின் சிறப்புகள்

    எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ், ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒரு சிறப்பைத்தந்திருக்கிறான். இந்த சிறப்புகளை அவர்கள் தங்கள் தியாகத்தின் மூலம் பெற்றார்கள்.
    எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ், ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒரு சிறப்பைத்தந்திருக்கிறான். இந்த சிறப்புகளை அவர்கள் தங்கள் தியாகத்தின் மூலம் பெற்றார்கள்.

    இதில் குறிப்பிடத்தக்கவர் இப்ராகிம் நபிகள். அவரது தியாகங்கள் போற்றப்பட வேண்டும் என்கிற காரணம் ஒருபுறம் இருந்தாலும், அதன் மூலம் அல்லாஹ் ஒட்டு மொத்த மனித குலத்திற்கு தனது அருட்கிருபையை வழங்க நாடினான்.

    இப்ராகிம் நபிகளின் தந்தை ஆஜர். இவர் களிமண்ணால் கடவுள் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வந்தார். குழந்தைப்பருவம் கடந்து சிந்திக்கும் திறனைப் பெற்ற போது தனது தந்தையின் இந்த செயலை இப்ராகிம் நபிகளார் நிராகரித்தார்கள். ‘மண்ணுக்கு எந்த மகிமையும் கிடையாது, எல்லா சக்திகளுக்கும் அப்பாற்பட்ட மாபெரும் சக்தி அல்லாஹ்’ என்பதை இப்ராகிம் நபிகள் மூலம் உலக மக்களுக்கு உணர்த்தினான் இறைவன்.

    மேலும், ‘நான் தான் கடவுள்’ என்று மக்களை நம்பச் செய்து நாசம் செய்த ‘நம்ரூத்’ என்ற மன்னனை இப்ராகிம் நபிகள் எதிர்த்தார்கள். ‘மனிதனுக்கு இறைவனுக்குரிய சக்தி இல்லை’ என்பதை நிரூபித்தார்கள்.

    கோபம் கொண்ட நம்ரூத், இப்ராகிம் நபிகளை நெருப்பு கிடங்கில் தூக்கி எறிந்தான். ஆனால் அவர் அச்சம் கொள்ளவில்லை. ‘நான் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் தான் என்னை காப்பாற்றும் வல்லமை பெற்றவன்’ என்றார்கள். நெருப்பிற்கு அல்லாஹ்விடமிருந்து ஆணை வருகிறது.‘நெருப்பே இப்ராகிம் நபியவர்களுக்கு இதம் தரும் குளிராக மாறி விடு’ என்று. நெருப்பும் கட்டளைக்கு அடிபணிந்தது.

    அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது அனைத்திற்கும் பொருந்தும் என்ற உண்மை இதன் மூலம் வெளிவந்தது.

    இறைவனின் கட்டளைக்கு ஏற்ப, இப்ராகிம் நபியவர்கள் தனது மனைவி ஹாஜராவையும், பச்சிளம் பாலகன் இஸ்மாயிலையும் அழைத்துக் கொண்டு மக்கா நோக்கி பாலைவனத்தில் பயணிக் கிறார்கள். ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும், அவர்கள் இருவரையும் அப்படியே விட்டு விட்டு திரும்பி செல்கிறார்கள்.

    கணவனின் இறையச்சத்தை நன்றாக அறிந்திருந்த அன்னை ஹாஜரா கேட்கிறார்கள் ‘இது இறைவனின் கட்டளையா?’ என்று. ‘ஆம்’ என்பது போல் நபியவர்கள் தன் தலையை மட்டும் அசைக் கிறார்கள்.

    ‘அப்படி என்றால் திரும்பிச் செல்லுங்கள். இறைவன் எங்களுக்கு போதுமானவன்’ என்று அன்னை ஹாஜரா உறுதி பட சொல் கிறார்கள். அன்னை ஹாஜரா மூலம் இறையச்சம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவ்வுலகிற்கு பாடமாய் அமைத்து தந்திருக் கிறான் அல்லாஹ்.

    பாலைவனத்தில், பச்சிளம் பாலகன் இஸ்மாயில் நபியவர்கள் பசியால் துடிக்கிறார்கள். தண்ணீரையாவது தரலாமே என்று அங்கும் மிங்கும் ஓடுகிறார் கள் ஹாஜரா அம்மையார்.

    சபா குன்று பகுதியில் ஒன்றும் கிடைக்காததால், மர்வா குன்றை நோக்கி திரும்புகிறார்கள். பச்சிளம் குழந்தை மணலில் காலை உதைத்து உதைத்து அழுகிறது. காலினால் உதைபட்ட இடத்திலிருந்து ஊற்று ஒன்று உருவாகி ஓடி வருகிறது அமிர்தமான தண்ணீர்.

    அள்ளி அள்ளி அருந்துகிறார்கள். போதும் என்ற நிலை வந்த போது, ‘போதும் போதும், நில் நில்’ என்றார்கள் அன்னை. இப்ரூ மொழியில் சொல்லப்பட்ட அந்த வார்த்தை ‘ஜம் ஜம்’. அந்தப் பெயரே பின்னால் அந்த நீரூற்றுக்கு நிலைபெற்றது.

    நீராதரமற்ற பாலைவனத்தில் ஓர் அற்புதம் தான் இந்த நீர்ச்சுனை. தோன்றிய நாள் முதல் இன்று வரை அதன் நீர் மட்டம் குறையவில்லை.

    அல்லாஹ் மனித குலத்திற்கு இந்த அருட்கொடையை வழங்க வேண்டும் என்பதற்காகத் தான், நபிகளுக்கு சோதனைகள் அளித்தான். அதன்மூலம் அவர்களின் தியாகங்களை வெளிக்கொணர்ந்தான்.

    கனவு காண்கிறார்கள் இப்ராகிம் நபியவர்கள். மகனை அறுத்து பலியிட வேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை. மகனின் அனுமதி பெற்று நிறைவேற்றத் துணிந்து விட்டார்கள். கத்தியை கழுத்தில் வைக்கிறார்கள், அறுக்க மறுக்கிறது. அருகில் உள்ள பாறையில் ஓங்கி அடிக்கிறார்கள் பாறை இரண்டாக பிளக்கிறது. அத்தனை கூர்மை. இங்கும் அல்லாஹ்வின் கட்டளை இல்லாததால் அறுக்கும் பண்பு கொண்ட கூரிய கத்தி அறுக்க மறுக்கிறது. இப்ராகிம் நபியவர்களின் தியாகத்தை மெச்சிய அல்லாஹ், ஆட்டை பகரமாக அனுப்பி குர்பானி செய்யச் சொன்னான். இது தான் தியாகத்திருநாளின் வரலாறு.

    இப்ராஹிம் நபிகளும், இஸ்மாயில் நபிகளும் இறையில்லமான ‘கஅபா’வை புனரமைப்பதன் நோக்கம் கொண்டே அந்த பாலைவனத்தில் பரிதவிக்க விடப்பட்டார்கள். பாக்கியங்களை அள்ளித்தரும் ‘கஅபா’ என்ற இறையில்லம் மனிதர்களுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற உயர் நோக்கில் தான் இப்ராகிம் நபியவர்களின் வாழ்வில் ஒரு சம்பவமாய் இதுவும் நிகழ்ந் தேறியது.

    உலக மக்களின் பெரும் பகுதியினர் இங்கு ஒன்று கூடுகிறார்கள். ஹஜ், உம்ரா கடமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ், இப்ராகிம் நபியின் தியாகத்தை முன்னிறுத்தி அதன் பின்னால் அவன் நாடிய அருட் கிருபைகளை உலகத்தில் பரவ செய்ய வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றியுள்ளான். அதனை அனைத்து மக்களுக்கும் பயன்தரக் கூடியதாக ஆக்கிவைத்தான்.

    தியாகத்தின் மறுபக்கத்தில் இப்படிபட்ட பெரும் அருட்கிருபைகளை மறைத்து வைத்து மனித குலம் மேம்பட வழி வகுத்து தந்தான்.

    எம். முஹம்மது யூசுப் உடன்குடி.
    Next Story
    ×