search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குறைஷிகளின் பேரமும் பெருமானாரின் பதிலும்
    X

    குறைஷிகளின் பேரமும் பெருமானாரின் பதிலும்

    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ‘பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று தொடங்கி அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள்.
    உமர் பின் கத்தாப் (ரலி) முஸ்லிமாகிவிட்ட பிறகு, நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள் “நாம் ஏன் மறைவாகச் செயல்பட வேண்டும்? நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியாக வேண்டும்” என்று இரண்டு குழுவாக முஸ்லிம்களைக் கூட்டி, ஒரு பக்கம் ஹம்ஜா (ரலி) நிற்க, மறுபக்கம் உமர் (ரலி) நிற்க, நடுவில் நபி முஹம்மது (ஸல்) என்று ஒரு திரளாக இறை இல்லத்திற்குள் நுழைந்தவுடன் குறைஷிகள் பீதியடைந்தனர். குறைஷிகளின் இரு வலிமை மிக்க வீரர்களான ஹம்ஜா (ரலி) மற்றும் உமர் (ரலி) இஸ்லாமை ஏற்ற பிறகு இணைவைப்பவர்கள் முஸ்லிம்களுக்கு வேதனை தருவதை குறைத்து கொண்டனர். நபி முஹம்மது (ஸல்) அவர்கள், ‘அல் ஃபாரூக்’ அதாவது நன்மை- தீமையை பிரித்தறிபவர் என உமர் (ரலி) அவர்களுக்குப் பெயரிட்டார்கள்.

    மற்றொரு நாள் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தனியாக அமர்ந்திருந்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உத்பா இப்னு ரபீஆ என்பவர் குறைஷிகளின் அனுமதியுடன் நபி (ஸல்) அவர்களை நெருங்கினார். நபி (ஸல்) அவர்களிடம் உத்பா, “எனது சகோதரனின் மகனே! நீ எங்களின் வம்சத்தில் கண்ணியமிக்கவர்.

    ஆனால் நீ கொண்டு வந்த புதிய மார்க்கத்தால் நமது சமுதாயத்தின் ஒற்றுமை குலைகிறது. எங்களின் சிலைகளையும், மார்க்கத்தையும் புறக்கணித்துவிட்டாய். நமக்கு முன் சென்ற நமது முன்னோர்களை ‘நிராகரித்தவர்கள்’ என்று கூறிவிட்டாய்! ஏன் இப்படிச் செய்கிறாய்? நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேர்க்க விரும்பினால், பெரிய செல்வந்தராக வேண்டுமென்று ஆசைப்பட்டால் எங்கள் செல்வங்களை உன்னிடம் கொடுத்துவிடுகிறோம்.

    ஆட்சி அதிகாரத்திற்காகத்தான் இதெல்லாமென்றால் உன்னையே எங்கள் அரசராக்கிக் கொள்கிறோம். அல்லது உனக்குப் பித்துப் பிடித்திருந்தால், உடல்நிலை குறைபாடின் சிக்கலால் இப்படிச் செய்கிறாயென்றால் எங்கள் செல்வங்கள் அனைத்தையும் செலவு செய்து உனக்கு நாங்கள் வைத்தியம் பார்க்கிறோம். என்ன சொல்கிறாய்?” என்று மிகவும் நயமாகப் பேசினார்.

    அவருக்கு பதில் தரும் வகையில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ‘பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று தொடங்கி அத்தியாயம் ஃபுஸ்ஸிலத்தை ஓதிக் காட்டினார்கள். அந்த அத்தியாயம் ஸஜ்தாவுடையது அதாவது நெற்றி தரையில் படும்படி சிரம் தாழ்த்தி வணங்குதல், (திருக்குர்ஆன் வாசிக்கும்போது சில இடங்களில் அல்லாஹ்வுக்கு சிரம் பணியுங்கள் என்று வரும் இடங்களில் ஸஜ்தா செய்ய வேண்டும்.) அப்படியே நபி முஹம்மது (ஸல்) ஸஜ்தா செய்தார்கள். ஓதி முடித்த பிறகு உத்பாவிடம் “நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன், இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்று நபி முஹம்மது (ஸல்) பதிலளித்தார்கள்.

    முகத்தைத் தொங்கப்போட்டவராக,  பலமான யோசனையோடு திரும்பிய உத்பா, குறைஷிகளிடம் “முஹம்மதை விட்டு விடுவோம். அவருடைய பணியில் குறுக்கிடாமல் இருப்போம். முஹம்மது என்னிடம் சொன்னது கவிதை அல்ல, ஜோசியமும் அல்ல. என்னால் விவரிக்க முடியாததை அவர் ஓதினார். ஆனால் அதற்கு மகத்தான ஆற்றல் உள்ளது. மற்ற அரபுகளை இவர் வெற்றி கொண்டாலும் அல்லது அழித்துவிட்டாலும் அது நமக்கு வெற்றிதானே?” என்று குறைஷிகளைக் குழப்புவதுபோல் பேசினார்.

    அதற்குக் குறைஷிகள் “முஹம்மத் தன்னுடைய நாவன்மையால் உத்பாவை வசியப்படுத்திவிட்டார். இனி தனி நபராக யாரும் முஹம்மதை சந்தித்துப் பேச வேண்டாம். நாம் குழுவாகச் சென்று உத்பா பேசிய பேரத்தை பேசுவோம்” என்று பேசி முடிவெடுத்தனர்.

    (திருக்குர்ஆன் 41:1-13, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×