search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூவுலகின் தலைவரும் இறைவனின் தூதருமான முஹம்மது (ஸல்)
    X

    பூவுலகின் தலைவரும் இறைவனின் தூதருமான முஹம்மது (ஸல்)

    தாத்தா அப்துல் முத்தலிப் இறைவனின் தூதருமான முஹம்மது (ஸல்) அவர்களை பார்த்து கொள்ளும் பொறுப்பை தனது மகனிடம் ஒப்படைத்தார்.
    தாய் - தந்தை இருவரையும் இழந்த முஹம்மது (ஸல்) அவர்களை மிகவும் அன்பாகப் பார்த்துக் கொண்டார் தாத்தா அப்துல் முத்தலிப். 

    தான் இறந்துவிடுவோம் அதன் பிறகு தமது பேரனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற அச்சம் எழவே, தமது மகன்களை அழைத்து அது பற்றிப் பேசினார். முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரர் அபூ தாலிப் தனது சகோதரரின் மகனை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றார். 

    பொறுப்பை ஒப்படைத்த மகிழ்ச்சியில் தாத்தா அப்துல் முத்தலிபும் இறந்துவிட்டார். அப்போது முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எட்டு வயது நிரம்பியிருந்தது. தன் தாத்தாவைப் போலவே அபூதாலிப்பும் முஹம்மது (ஸல்) அவர்களை மிகவும் பாசத்தோடு பார்த்துக் கொண்டதோடு அவரைத் தனியாக விட்டுவிடாமல் எல்லா நேரத்திலும் தன்னுடனே வைத்துக் கொண்டார். 

    அபூதாலிப் ஒருமுறை சிரியாவிற்கு வியாபாரத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கு பஹீரா என்ற பிரபலமான துறவி அபூதாலிப்பை தேடி வந்து அவருடன் சென்றிருந்த முஹம்மது (ஸல்) அவர்களைப் பார்த்து “இந்தச் சிறுவன் யார்?” என்று கேட்டார். அதற்கு அபூதாலிப் “இது என்னுடைய மகன்” என்று பதிலளித்தார். அதற்குப் பஹீரா “அது சாத்தியமில்லையே” என்று கூற, “இல்லை, இச்சிறுவன் என் சகோதரனின் மகன். 

    இவர் அவருடைய தாய் வயிற்றில் இருக்கும்போதே என் சகோதரர் இறந்துவிட்டார்” என்று உண்மையுரைத்தார். “உண்மைதான். என் கணிப்புச் சரிதான்” என்று சொல்லி முஹம்மது (ஸல்) அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். “எனக்குத் தெரிந்த உண்மை, மற்ற யூதர்களுக்குத் தெரிந்துவிட்டால் இச்சிறுவனுக்கு ஆபத்து ஏற்படலாம். 

    ஆகையால் இவரை உன் நாட்டிற்கே அழைத்துச் சென்றுவிடு. அழகான எதிர்காலம் கொண்டவர், இப்பூவுலகுக்குத் தலைவராக, இறைவனுக்குத் தூதராக வந்திருப்பவர். இவர் இந்நகரத்தில் நுழையும்போது மரங்களெல்லாம் சிரம் பணிந்ததை நான் கண்டேன்” என்று எடுத்துரைத்தார். 

    அவருடைய வாக்கிற்குக் கட்டுப்பட்டு உடனே அபூதாலிப் சிலரிடம் பன்னிரெண்டு வயது சிறுவரான முஹம்மது (ஸல்) அவர்களைப் பாதுகாப்பாக மக்காவிற்கே திரும்ப அனுப்பி வைத்தார். 

    (ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம்) 

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×