search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இளவயதிலேயே அனாதையான அண்ணல் நபிகள்
    X

    இளவயதிலேயே அனாதையான அண்ணல் நபிகள்

    செவிலித்தாய் ஹலீமாவின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பல நன்மைகளையும் வளங்களையும் தந்தான்.
    செவிலித்தாய் ஹலீமாவின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பல நன்மைகளையும் வளங்களையும் தந்தான், அது குழந்தை முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு ஹலீமாவின் குடும்பத்தாருடன் இருப்பதால் அவர்களுக்குக் கிடைக்கிறது என்று ஹலீமா நம்பினார். அதனால் குழந்தை பால்குடி மறக்கடிக்கப்பட்ட பிறகும் முஹம்மது (ஸல்) இன்னும் சில காலம் தங்களுடன் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியதால் தாய் ஆமினாவும் சம்மதம் தெரிவித்தார்.

    முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நான்கு வயது இருக்கும்போது, அவர்கள் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) வந்து நபியைப் பிடித்து மயக்கமுறச் செய்து, படுக்க வைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியிலெடுத்தார்கள். அதில் ஒட்டியிருந்த ஒரு சதைத் துண்டை வெளியில் எடுத்து “இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு” என்று கூறியவராக அதனை நீக்கினார். 

    பிறகு ஒரு தங்கத் தாம்பூலத்தில் இதயத்தை வைத்து ஸம்ஸம் தண்ணீரால் அதைக் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்திலேயே மீண்டும் இதயத்தைப் பொருத்தினார். நபியவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், ஹலீமாவிடம் ஓடிச் சென்று “முஹம்மத் கொலை செய்யப்பட்டார்” என்று கூறினர். இதைக் கேட்டுப் பதறியடித்துக் கொண்டு ஹலீமாவின் குடும்பத்தார் குழந்தை முஹம்மத்தை நோக்கி விரைந்து வந்தனர். குழந்தை முஹம்மது (ஸல்) அவர்கள் பயத்தால் நிறம் மாறிக் காணப்பட்டார்கள். 
     
    அதைக் கண்டு அதிர்ந்துபோன ஹலீமா நபி முஹம்மது (ஸல்) அவர்களை மக்காவிற்கு அழைத்துச் சென்று அவரது தாயாரிடமே ஒப்படைத்துவிட்டார்கள். 

    ஆறு வயது வரை தன் தாயார் ஆமினாவுடன் முஹம்மது (ஸல்) வளர்ந்தார்கள். தாயார் ஆமினா தன் இறந்த கணவர் அடக்கம் செய்யப்பட்ட மண்ணறையைப் பார்க்க விரும்பினார். சிறுவராக இருந்த முஹம்மது (ஸல்) அவர்கள், தம் வீட்டுப் பணிப்பெண் மற்றும் தன் கணவரின் தந்தை அப்துல் முத்தலிப்புடன் மதீனாவிற்குச் சென்று அங்கு ஒரு மாதம் வரை தங்கி இருந்தார். அங்கிருந்து மீண்டும் மக்காவிற்கு வரும் வழியில் நோய்வாய்ப்பட்டு மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயுள்ள அப்வா என்ற இடத்தில் ஆமினா இறந்துவிட்டார்.

    அனாதையாகிவிட்ட முஹம்மது (ஸல்) அவர்களை, தாத்தா அப்துல் முத்தலிப் மக்காவிற்குப் பத்திரமாக அழைந்து வந்தார். தாய்- தந்தையை இழந்த சிறுவரிடம் மிகுந்த அன்போடும் பாசத்தோடும் நடந்து கொண்டார். தன் மகன்களைவிட, பேரரின் மீது மிகுந்த அன்பைச் செலுத்தினார்.

    (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் நூல் 1 ஹதீஸ் 261, இப்னு ஹிஷாம்)

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×