search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அல்லாஹ்வின் அருள் வளம்
    X

    அல்லாஹ்வின் அருள் வளம்

    அல்லாஹ்வின் அருள் கொண்ட வளம் பொருந்திய குழந்தையை எடுத்து வந்திருப்பதாக ஹலீமாவும் அவருடைய கணவரும் நம்பினார்கள்.
    தாய் ஆமினா மற்றும் தாத்தா அப்துல் முத்தலிபிடமிருந்து குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை, செவிலித்தாய் ஹலீமா பெற்றுக் கொண்டார். கிராமத்திலிருந்து வந்தவர்கள் அன்றிரவு நகரத்தில் தங்கி மறுநாள் காலையில் அவர்களின் ஊருக்குத் திரும்புவதாக இருந்தனர்.

    குழந்தையை எடுத்து ஹலீமா அவருடைய மடியில் கிடத்தியதும் அவருடைய மார்புகளில் பால் சுரந்தது. அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு அவருடைய மார்கள் பால் சுரந்தது. குழந்தை முஹம்மது வயிறு நிரம்பப் பால் அருந்தி, அதன் பிறகு ஹலீமாவின் குழந்தையும்  வயிறு நிரம்பப் பாலருந்தி நிம்மதியாக இருவரும் தூங்கினர். 

    ஹலீமாவின் கணவர் அவர்களிடமிருந்த பெண் ஒட்டகத்திடம் நெருங்கும்போது அதனுடைய மடி நிரம்பியிருந்ததைக் கண்டார். பாலில்லாமல் வறண்டிருந்த மடி வலுவாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தோடு பாலைக் கறந்து கணவன் – மனைவி இருவரும் பசியாறினர். பல நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு அந்த இரவு மிகவும் நிம்மதியான நிறைவான இரவாக அமைந்தது. 

    மறுநாள் மக்காவிலிருந்து புறப்பட்டபோது ஹலீமா இரு குழந்தைகளுடன் கழுதையில் ஏறி உட்கார்ந்தார். அப்பெண் கழுதை வழக்கத்திற்கு மாறாக அக்குழுவினரே வியக்குமளவிற்கு வேகமெடுத்து முந்தியது. 

    அதற்கு முன்தினம் பலவீனமாக, சோர்வாக நடந்து குழுவினருக்குச் சிரமம் தந்த கழுதை முந்தியடிப்பதைக் கண்டு “நேற்று ஏறி வந்த அதே கழுதைதானா இது?” என்று சந்தேகத்துடன் கேட்டனர். “நேற்று பயன்படுத்திய அதே கழுதைதான்” என்று ஹலீமா உறுதி செய்தபோது. ஒரே நாளில் எப்படி இப்படியான மாற்றமென்று வியந்தனர்.

    அல்லாஹ்வின் அருள் கொண்ட வளம் பொருந்திய குழந்தையை எடுத்து வந்திருப்பதாக ஹலீமாவும் அவருடைய கணவரும் நம்பினார்கள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.

    (ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு
    Next Story
    ×