search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அகிலத்தாரின் அருட்கொடையாக வந்துதித்த பெருமானார்
    X

    அகிலத்தாரின் அருட்கொடையாக வந்துதித்த பெருமானார்

    அப்துல்லாஹ் மிக அழகிய தோற்றமுடையவராகவும், ஒழுக்கமானவராகவும், இளையவராகவும், தந்தையின் பிரியத்திற்குரியவராகவும் இருந்தார்.
    கினானா குடும்பத்தைச் சேர்ந்த அப்து மனாஃபின் மகனான ஹாஷிமுக்கு ஹஜ் பயணிகளுக்கு உணவளிப்பதும் தண்ணீர் கொடுப்பதும் பொறுப்பாக இருந்தது. அவருடைய மறைவிற்குப் பிறகு ஹாஷிமின் மகன் அப்துல் முத்தலிப் அந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்தார். அவருக்கு மக்களிடையே பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. மேலும் அவர் செல்வந்தராக இருந்தார். அவருடைய தாத்தா அப்து மனாஃபின் தாய் குஜாஆ என்ற வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் அப்துல் முத்தலிபுக்கு அந்தக் கோத்திரத்தினரிடமும் நன்மதிப்பிருந்தது.

    ஒருநாள் அப்துல் முத்தலிபுக்குக் கனவில் ஸம்ஸம் கிணற்றின் இடம் காண்பிக்கப்பட்டது. அந்தக் கனவை நினைவில் வைத்துக் கொண்டு அவர் அந்த இடத்தில் தோண்டியபோது, ஜுர்ஹும் கோத்திரத்தினர் ஸம்ஸம் கிணற்றில் போட்ட தங்கத்தாலான மான்களும் அஸ்வத் கல்லும் கிடைத்தன. மான்களை உருக்கி கஅபாவிற்குக் கதவாக்கினார் அப்துல் முத்தலிப். ஹஜ் பயணிகளுக்குத் தண்ணீர் மற்றும் உணவளிப்பதின் பொறுப்பை ஏற்றிருந்த அப்துல் முத்தலி்புக்கு ஸம்ஸம் தண்ணீர் வரப்பிரசாதமானது. அங்கு வரும் ஹஜ் பயணிகளுக்கு ஸம்ஸம் கிணற்று நீரை வழங்கி மகிழ்ந்தார்.

    அப்துல் முத்தலிபுக்கு இறைவன் பத்து ஆண் குழந்தைகளையும் ஆறு பெண் குழந்தைகளையும் வழங்கியிருந்தான். மகன்களின் பெயர்கள் ஹாரிஸ், சுபைர், அபூதாலிப், ஹம்ஸா, அபூலஹப், கைதாக், முகவ்விம், ழிரார், அப்பாஸ் மற்றும் அப்துல்லாஹ்.

    அப்துல் முத்தலிப் மகன்கள் தனக்கு உதவும் வயதை அடைந்ததும் அதில் ஒருவனை இறைவனுக்காகப் பலியிடுவதாக நேர்ச்சை செய்து கொண்டார். அதற்கான நேரம் வந்ததும் சீட்டுக் குலுக்கிப் பார்த்ததில் மகன் அப்துல்லாஹ்வின் பெயர் வந்தது.

    அப்துல்லாஹ் மிக அழகிய தோற்றமுடையவராகவும், ஒழுக்கமானவராகவும், இளையவராகவும், தந்தையின் பிரியத்திற்குரியவராகவும் இருந்தார். அப்துல்லாஹ்வின் பெயர் வரவே அப்துல் முத்தலிப் ‘ஹுபுல் சிலையிடம்’ பிரார்த்தித்து அப்துல்லாஹ்வின் பெயரையும், மற்றொரு சீட்டில் பத்து ஒட்டகங்கள் என்று குலுக்கி எடுத்த போது மீண்டும் அப்துல்லாஹ்வின் பெயரே வந்தது. ஆகையால் அப்துல் முத்தலிப் ஒட்டகங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே சென்றார். நூறு ஒட்டகங்கள் ஒரு சீட்டிலும், அப்துல்லாஹ் என்று ஒரு சீட்டிலும் எழுதி குலுக்கிப் போட்டபோது நூறு ஒட்டகங்கள் என்று வந்தது. ஹுபுல் திருப்தியடைந்துவிட்டதென நூறு ஒட்டகங்களைப் பலியிட்டு, தமக்குச் சாதகமாக வரும் வரை குலுக்கி அப்துல்லாஹ்வை பலியிடாமல் காத்துக் கொண்டார் அப்துல் முத்தலிப்.

    தந்தையைப் போலவே அப்துல்லாஹ்வும் மக்காவில் நன்மதிப்புப் பெற்றிருந்தார். திருமண வயதில் ஆமினா என்பவரை மணமுடித்தார். ஆமினா கர்ப்பமாக இருந்தபோது மனைவியைவிட்டு விட்டு வணிகத்திற்காக மதீனா நகரத்திற்குச் சென்றிருந்தபோது அங்கேயே மரணமடைந்துவிட்டார் அப்துல்லாஹ்.

    அப்துல்லாஹ்வின் மனைவி ஆமினா குழந்தையைப் பெற்றெடுத்ததும் அந்த நற்செய்தியை தாத்தா அப்துல் முத்தலிபுக்குத் தெரிவித்தார். எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த அப்துல் முத்தலிப், பேரனை இறை இல்லத்திற்குத் தூக்கிச் சென்று இறைவனுக்கு நன்றி செலுத்தி பிரார்த்தித்தார். அந்தக் குழந்தைக்கு அதற்கு முன் எவருக்குமே சூட்டப்படாத பெயரை வைத்தார். அந்தப் பெயர் ‘முஹம்மது’.

    அகிலத்தின் அருட்கொடையாகப் பிறந்த முஹம்மது நபி (ஸல்) பிறந்தது யானை ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம், திங்கட்கிழமை கி.பி. 571 அதிகாலை.

    (ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×