search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துன்பம் போக்கும் அமாவாசை வழிபாடுகள்
    X

    துன்பம் போக்கும் அமாவாசை வழிபாடுகள்

    சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்வது நல்லது.
    சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை ஆகியவை முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.

    ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அம்பிகை கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும்.
    ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.

    மகாளய அமாவாசை மகிமை :

    பித்ருக்களுக்காகவே 14 நாட்கள் நோன்பிருந்து, அந்தந்த நாட்களுக்கு உரிய பித்ரு பூஜைகளை செய்துக் கொண்டிருந்த நம் அனைவரையும் மேல் உலகில் உள்ள அனைத்து பித்ருக்களும் ஆசி கூற ஆவலுடன் நம் அருகில் வந்து நிற்கும் புண்ணிய நாள் மகாளய அமாவாசை நாளாகும்.

    மகாளய அமாவாசையன்று பித்ரு பூஜை, தர்ப்பண காரியங்கள், அன்னதானம் ஆகியவற்றை மனதாலும், வாக்காலும், சரீரத்தினாலும் சிறப்புடன் செய்து நிறைவாக பித்ருக்களை மனதார வணங்கிடல் வேண்டும். நமக்கு வேண்டியதை நாம் கேட்காமலேயே பித்ருக்கள் அருள்வார்கள்.

    மதியம் 12 மணிக்குள் வருவதற்கு முன்னரே பித்ரு தர்ப்பணம் செய்வது உசிதம். தொடங்குவதற்கு முன்னர் நம்முடைய நியாயமான கோரிக்கைகளையும், பிரார்த்தனைகளையும் முன் வைத்து பித்ருக்களின் ஆசி பெற வேண்டும். அதற்கு பின்னரே இறைவனை வழிபட வேண்டும்.

    மகாளய பட்சத்தில் பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரை விசேஷமான நாட்கள்தான். என்றாலும் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. பிரதமை முதலாம் நாள் அன்று செய்யப்படும் சிரார்த்தம் அல்லது தர்ப்பண காரியங்களுக்கு தன லாபம் கிட்டும்.

    துவீதியை இரண்டாம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜையால் சந்ததி விருத்தி உண்டாகும். திருதியை மூன்றாம் நாளன்று செய்யப்படும் பித்ரு காரியங்களுக்கு சிறந்த திருமண பாக்கியம் பெற்று நல்ல, மனதிற்கு பிடித்த வரன் அமையும். சதுர்த்தி நான்காம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜனத்திற்கு சத்துருக்களை அகற்றும் சக்தி உண்டு.

    பஞ்சமி ஐந்தாம் நாளன்று பித்ரு காரியங்கள் செய்வதால் சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும். சஷ்டி ஆறாம் நாளன்று பித்ருக்களை நினைவு கூர்ந்து பித்ரு காரியங்களை செய்தால் உயர்ந்த புகழைப் பெறுவான். சப்தமி-ஏழாம் நாளன்று பித்ருக்களை நினைவு கூர்ந்து பித்ரு காரியங்களை செய்தால் சிறந்த வம்ச விருத்தி பெறுவான்.

    அஷ்டமி எட்டாம் நாளன்று சிரார்த்தம் மற்றும் தர்ப்பண காரியங்களைச் செய்பவன் சிறந்த புத்தியை அடைவான். நவமி ஒன்பதாம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜனைக்கு அழகுள்ள மனைவி அமைவாள். தசமி பத்தாம் நாளன்று பித்ரு பூஜனம் செய்பவன் இஷ்டப்பட்டதை எல்லாம் அடைவான்.

    ஏகாதசி பதினொன்றாம் நாளன்று மனதார பித்ருக்களை வழிபட்டு சிரார்த்த, தர்ப்பண காரியங்களை செய்பவன் அனைத்து வேதங்களையும் பெறுவான். துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜனம் செய்பவன் ஸ்வர்ண லாபம் பெறுவான். திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவன் அறிவு ஞான சக்தி, பசுக்கள் தேஹ ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம் அனைத்தும் பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

    சதுர்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் செய்யப்படும் பித்ரு காரியங்களால் திருப்தி அடைவார்கள். மகாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை ஆராதித்து, மனதார வணங்கினால் சகல பாக்கியங்களும் கிட்டும்.

    இப்படி மகாளய பட்சத்தின் ஒவ்வொரு நாளின் மகிமையை நமக்கு பல சாஸ்திர நிபுணர்கள் எடுத்துரைக்கின்றார்கள். 16 நாட்களும் சிரார்த்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும் என்பதில் சிறிரும் சந்தேகமில்லை. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திபடுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அவற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்தால் மிகவும் விசேஷம்.

    தாய், தந்தையின் இறந்த ததிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. மகாளய பட்சத்தின் 16 நாட்களும் மிகவும் முக்கியமான நாட்களாகும் என்பதால் குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.
    Next Story
    ×