search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிணிகள் தீர்க்கும் திருத்தணிகை முருகன்
    X

    பிணிகள் தீர்க்கும் திருத்தணிகை முருகன்

    திருப்புகழை ஓதிக்கொண்டு திருத்தணிகை மலை ஏறிச் சென்று வழிபடுவோர்க்குப் பிறவி என்னும் நோயே ஒழியும் என்றும் அறிவுறுத்துகிறார்.
    ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நம் முன்னோர் கண்ட அனுபவ உண்மை. ‘‘மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும்” என்று கதிர்காமக் கந்தனிடம் வேண்டுவார் அருணகிரியார். நோயின்றி வாழ்தல் ஒரு கலை. உடம்பு ஓர் ஒப்பற்ற கருவி. ‘‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேன்” என்பார் திருமூலர். நோய் என்ற சொல்லுக்கு வியாதி என்று பொதுப் பொருள் இருந்தாலும் துன்பம், வருத்தம், குற்றம், அச்சம், துக்கம் எனப், பல பொருள்கள் உண்டு. இதனைப் பிணி என்றும் கூறுவர்.

    இறைவன் மந்திரமும், தந்திரமும், மருந்துமாகி தீரா நோய் தீர்த்தருள் புரிகின்றான்.  வாழ்க்கையில் உடல் நலம் பேணும் வகையிலும், மருத்துவ வகையிலும் அவன் குடியிருக்கும் ஆலயங்களே முன்னிற்கின்றன. திருக்கோயில் திருக்குளங்களில் நீராடி இறைவனை பூசித்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றவர்களைப் பற்றித் தல புராணங்கள் விரிவாகப் பேசுகின்றன.

    அருணகிரிநாதர், மனிதனுக்குத் தொல்லைகள் பல தந்து உயிரையே போக்கும் நோய்களைப் பட்டியலிட்டு, இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவை என்னை வருத்தக் கூடாது என்று தணிகைக் கந்தனிடம் வேண்டுகிறார். மலைத் தலங்களில் முதன்மையான தணிகாசலத்தை உடலால் சென்று வழிபட வேண்டும் என்றும், திருப்புகழை ஓதிக்கொண்டு திருத்தணிகை மலை ஏறிச் சென்று வழிபடுவோர்க்குப் பிறவி என்னும் நோயே ஒழியும் என்றும் அறிவுறுத்துகிறார்.

    ‘‘இருமல், உரோகம்… என்று தொடங்கும் திருத்தணிகைத் திருப்புகழ் நோயற்ற வாழ்வு வாழ சிறந்த மந்திரம் போன்றது. இதனைத் தினமும் ஆறு முறையாவது ஓத வேண்டும். ஆண்டுக்கு ஒரு நாளாவது தணிகை வேலன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும். நோய் வந்தால் இத்திருப்புகழை ஆறுமுறை அன்புடன் ஓதி திருநீறு பூசிக்கொண்டால் நோய் நீங்கிவிடும்’ என்பது வள்ளிமலை சுவாமிகளின் வாக்கு. நாமும் தணிகை வேலவனைத் தரிசித்து, அவனருளால் நோயில்லாப் பெருவாழ்வை பெற்று மகிழ்வோம்.

    இருமல் உரோகம் முயலகன் வாதம்
    எரிகுண நாசி விடமே நீர்
    இழிவு விடாத தலைவலி சோகை
    எழுகள மாலை இவையோடே
    பெருவயி றீளை எரிகுலை சூலை
    பெருவலி வேறும் உள நோய்கள்
    பிறவிகள் தோறும் எனை நலியாத
    படிஉன தாள்கள் அருள்வாயே
    Next Story
    ×