search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேவன் நம்மை மறப்பதில்லை
    X

    தேவன் நம்மை மறப்பதில்லை

    தேவனுக்கு பிரியமாக வாழ ஆரம்பிக்கும் பொழுது நம்முடைய வாழ்வில் சமாதானமும், சந்தோஷமும் எப்பொழுதும் நமக்குள் இருக்கும் என்று வேதம் கூறுகிறது
    சீயோனோ; 'கர்த்தர் என்னை கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்' என்று சொல்லுகிறாள். 'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை' (ஏசாயா 49:14,15) என்ற இறை வார்த்தைகள், இறைவனின் உள்ளத்தை விளக்குகின்றன.

    ஒரு தாய், தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலேயே அதை அன்போடு வளர்ப்பவளே தாய்.

    ஆனால் இன்றைய சமுதாயத்திலே அப்படிப்பட்ட தாய் கூட, தன் பிள்ளைகளை மறந்து விடுகிறாள். இதுபோன்ற சம்பவங்களை நாம் அடிக்கடி செய்தித்தாள்களிலே படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அத்தகைய அன்பில்லாத காலத்திலேதான் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதே இல்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்த பரம தகப்பன், நம்மை ஒரு நாளும் கைவிடுவதே இல்லை. ஒருநாளும் மனிதனை தேடிப் போகாதீர்கள்.
    ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். அவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

    இக்கால சூழ்நிலையில் மட்டுமல்ல, அக்காலத்திலும் கூட இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையில், அவர்கள் தேவனை விட்டு விலகிப் போனார்கள். 'கர்த்தர் என்னை மறந்தார், ஆண்டவர் என்னை கைவிட்டார்' என்று கூறியப்படியே இறைவனிடமிருந்து விலகி சென்றார்கள்.

    ஆனால் உண்மையில் தேவனை விட்டு மனிதர்கள்தான் விலகிச் செல்கிறார்களே தவிர, ஒரு போதும் தேவன் மனிதனை விட்டு விலகுவது இல்லை. இதை ஆதி மனிதனான ஆதாம் முதலே, நாம் வேதாகமத்தில் பார்க்கிறோம். அதே நேரத்தில் முதல் மனிதன் முதற்கொண்டு தேவனே நம்மை தேடி வந்திருக்கிறார். இயேசு வானவர் நம்மை தேடியே, இந்தப் பூமியில் மனிதனாக பிறந்து நமக்காக துன்பங்களை அனுபவித்தார்.

    நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்னும் நமக்காகவே காத்திருக்கிறார். இயேசு கைவிடுபவர் அல்ல, கரம் பிடித்து நடத்துபவர். நம்முடைய கரத்தை இயேசுவின் கரத்தில் கொடுத்து ‘தேவனே நீர் என்னை நடத்தும்' என்று, நம்மை முழுவதுமாக அர்ப்பணிக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய செயல்களை அனுதினமும் பார்க்கலாம்.

    இயேசு கிறிஸ்து கூறுகிற இளைய குமாரன் உவமையில், தகப்பனை விட்டு இளைய குமாரன் தான் விலகி போகிறானே தவிர, அவனை விட்டு தகப்பன் விலகி செல்லவில்லை. நம்முடைய தகப்பனாகிய தேவன், எப்பொழுதும் நம்மை அரவணைக்கவே ஆசைப்படுகிறார். நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற சிறுசிறு விஷயங்கள் நம்மை கவலையில் ஆழ்த்தும் போதெல்லாம், இறை விசுவாசத்தில் இருந்து விலகி தேவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மறந்து 'தேவன் என்னை கை விட்டார்; என்னை அவர் மறந்து விட்டார்' என்று நாம் எண்ணுவோமானால், அது விசுவாச துரோகம்.

    பவுல் அப்போஸ்தலர் தன்னுடைய துன்பத்தின் மத்தியிலும் 'நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்' (2 தீமோ 1:12) என்று, விசுவாசத்தின் உறுதியை வெளிப்படுத்தினார். அதுபோல நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழலிலும் ‘கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்' (சங் 138:8) என்று விசுவாசத்தில் உறுதியாய் இருக்கவேண்டும்.

    'கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்து விடு' (சங் 55:22) என்ற வேத வார்த்தைக்கு கீழ்ப் படிந்தவர்களாக, இயேசுவின் மீது எல்லா பாரங்களையும் இறக்கி வைக்க பழகிக்கொள்ளுங்கள். அப்போது தேவன் அனுதினமும் நமக்காக செயல்படுவதை பார்க்கலாம். மேலும் தேவனுடைய சித்தத்தை அறிந்து செயல்படும் மனிதனின் வாழ்க்கையில் 'தேவன் என்னை கை விட்டார்' என்ற எண்ணத்திற்கே இடம் கொடுக்காமல், தேவனின் வழிக்காட்டுதலில் வாழலாம்.

    தேவனுடைய சித்தத்தை வேத வாசிப்பினாலும், ஜெபத்தினாலும் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நாம் ஜெபிப்பது நம்முடைய சித்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இருப்பதைவிட, தேவனுடைய சித்தத்தை நம்முடைய வாழ்வில் நிறைவேற்றிக் கொள்வதாக அமையவேண்டும்.

    நம்முடைய சுயசித்தம் எந்த அளவிற்கு அழிக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு தேவனுடைய சித்தம் நமது வாழ்வில் செயல்பட ஆரம்பிக்கிறது. தேவனுடைய சித்தம் நமது வாழ்வில் செயல்பட ஆரம்பிக்கும் பொழுது தேவனோடு நெருங்கி தேவனுக்கு பிரியமாக வாழ ஆரம்பிக்கிறோம்.

    தேவனுக்கு பிரியமாக வாழ ஆரம்பிக்கும் பொழுது நம்முடைய வாழ்வில் சமாதானமும், சந்தோஷமும் எப்பொழுதும் நமக்குள் இருக்கும் என்று வேதம் கூறுகிறது 'ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக் களும் அவனோடே சமாதானமாகும் படி செய்வார்' (நீதி 16:7). எனவே நாம் தேவனோடு இருக்க பிரயாசப்பட்டால், தேவன் என்றென்றைக்கும் நம்மோடு கூடவே இருப்பார்.

    - மிராண்டாஸ், சென்னை.
    Next Story
    ×