search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசுவின் எளிமையான போதனைகள்
    X

    இயேசுவின் எளிமையான போதனைகள்

    இயேசு மிகவும் எளிமையாக மக்களுக்குப் புரியும் விதமாக தனது போதனைகளை அமைத்துக் கொண்டார்.
    நீங்கள் உலகின் உப்பு போன்றவர்கள். உப்பு தன்னுடைய உவர்ப்புத் தன்மை இல்லாமல் போனால் எதற்கும் பயன்படுவதில்லை. அது வெளியிலே கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும். உவர்ப்புத் தன்மையைக் காத்துக் கொள்ளுங்கள். உப்பைப் போல உலகிற்கு சுவை ஊட்டுபவர்களாக இருக்க வேண்டும்’ என்று இயேசு விளக்கினார்.

    ‘நீங்கள் உலகின் ஒளியைப் போன்றவர்கள். விளக்கைக் கொளுத்தி மரக்காலின் கீழ் மறைத்து வைத்தால் அதனால் என்ன பயன்? அதன் ஒளி சுற்றியிருக்கும் இருட்டை அகற்ற வேண்டும். அதற்கு அந்த விளக்கானது விளக்குத் தண்டின் மீது தான் இருக்க வேண்டும். நீங்களும் விளக்கு போன்றவர்கள்’ என்ற இயேசு உலகின் பாவ இருளை அகற்றும் முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    ‘தீமையைத் தீமையால் வெல்ல முடியாது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதெல்லாம் பழைய போதனைகள். மோசேயின் காலத்தில் ஒருவனுடைய பல்லை யாரேனும் உடைத்தால் பதிலுக்கு அவனுடைய கண்ணைப் பிடுங்குவதோ, மிருகத்தனமாய் நடந்து கொள்வதோ வழக்கமாய் இருந்தது. அதை நெறிப் படுத்தத் தான் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று சட்டங்கள் வகுத்தார்கள்’.

    ‘நான் இப்போது சொல்கிறேன், அவற்றை விட்டு விடுங்கள். யாரேனும் உங்களை வலக்கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு உங்கள் இடக்கன்னத்தையும் காட்டுங்கள். அவன் செய்வது தவறு என்பதை அவனே புரிந்து கொள்ள வையுங்கள்’.

    ‘யாரேனும் உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ள விரும்பினால் அவனுக்கு அதைவிட விலையுயர்ந்த உங்கள் மேலாடையையும் கொடுங்கள். யாராவது ஒரு கல் தொலைவு கூட வர கட்டாயப்படுத்தினால், இரண்டு கல் தொலைவு அவனோடு செல்லுங்கள். பணிவாய் இருப்பதற்கும் ஒரு துணிவு வேண்டும். அதை வளர்த்துக் கொள்ளுங்கள்’.

    இயேசுவின் இந்த போதனையினால் கவரப்பட்டு ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். ஒரு நாள் இயேசு பெத்தானியாவில் பெரும் திரளான மக்கள் பின் தொடர சென்று கொண்டிருந்தார்கள். அந்தத் தெரு ஓரத்தில் இரண்டு பார்வையிழந்தவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    அவர்கள் சத்தத்தைக் கேட்டபோது தங்களுக்கு அதிக காசு கிடைக்கும் என்ற ஆவலில் சத்தமாகப் பிச்சை கேட்டார்கள்.

    வழக்கத்துக்கு மாறான கூட்டம் என்பதால் அவர் களில் ஒருவன் சென்று கொண்டிருந்த ஒருவனைப் பிடித்து, ‘ஏன் இவ்வளவு கூட்டம்?’ என்று கேட்டான்.

    ‘இயேசு சென்று கொண்டிருக்கிறார். அதனால் தான் இத்தனை கூட்டம்’ அவர் பதில் சொன்னார்.

    ‘இயேசு சென்று கொண்டிருக்கிறார்’ என்பதைக் கேட்டதும் அந்த இரண்டு பார்வையிழந்த மனிதர் களும் ‘தாவீதின் மகனே... இயேசுவே... எங்கள் மீது இரக்கம் வையும்’ என்று உரத்த குரலில் கத்தினார்கள்.

    ஏனெனில் அவர்கள் இயேசுவைப் பற்றியும் அவருடைய குணமாக்கும் வல்லமை பற்றியும் கேள்விப்பட்டிருந்தார்கள். இப்போது அவர்களுடைய தேவை பொருளாதாரத்தைத் தாண்டி பார்வை பெறுதல் என்று மாறியிருந்தது.

    பார்வையில்லாமல் இருந்ததால் அவர்களால் இயேசுவை நெருங்கிச் செல்ல முடியவில்லை.

    ‘தாவீதின் மகனே... இயேசுவே... எங்கள் மீது இரக்கம் வையும்’ மீண்டும் அவர்கள் கத்தினார்கள்.

    ‘பேசாதே... அமைதியாய் இரு ...’ கூட்டத்தினர் அவர்களை அதட்டினார்கள்.

    ஆனால் அவர்கள் தங்கள் கூச்சலை நிறுத்தவில்லை. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தால் அமைதியாய் போக முடியுமா? அவர்கள் இன்னும் உரக்கக் கத்தினார்கள்.

    ‘தாவீதின் மகனே... இயேசுவே... எங்கள் மீது இரக்கம் வையும்’.

    இயேசு நின்றார், ‘அவர்களை என்னிடம் கூட்டி வாருங்கள்’ என்றார்.

    அதுவரை அவர்களைத் திட்டிக் கொண்டிருந்த கூட்டத்தினர் அவருக்கு அருகே சென்றனர், ‘உற்சாகமாய் இரு. இயேசு உன்னை அழைக்கிறார்’ என்றனர்.

    அவர்கள் இருவரும் பரவசமானார்கள்.

    இயேசு அவர்களைப் பார்த்தார்.

    ‘உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?’ இயேசு கேட்டார்.

    ‘ஆண்டவரே... நாங்கள் பார்வை பெற வேண்டும். எங்கள் கண்களைத் திறந்தருளும்’ அவர்கள் வேண்டினார்கள்.

    ‘நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?’ இயேசு அவர்களுடைய நம்பிக்கையை ஆழம் பார்த்தார்.

    ‘ஆம் ஐயா...’ சற்றும் தயக்கமில்லாமல் பதில்  வந்தது.

    இயேசு அவர்கள் கண்களைத் தொட்டார், ‘உங்கள் நம்பிக்கை உங்களை நலமாக்கியது. பார்வையைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்.

    இருட்டுக்குள் கிடந்த இருவரும் சட்டென்று வெளிச்சத்துக்குள் வந்தார்கள்.

    கூட்டத்தினர் அதிசயிக்க, பார்வை பெற்றவர்கள் சொல்ல முடியா ஆனந்தத்தில் குதித்தார்கள்.

    ‘யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கண்டிப்பான குரலில் இயேசு சொன்னார்.

    ஆனால் அவர்களோ தங்களுக்குப் பார்வை தந்தவரின் பேச்சைக் கேட்கவில்லை. ஊரெங்கும் சென்று இயேசு தங்களுக்குச் செய்ததைப் பற்றி அறிவிக்கத் தொடங்கினார்கள்.
    Next Story
    ×