search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்:  கே.பாக்யராஜ் கோரிக்கை
    X

    சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்: கே.பாக்யராஜ் கோரிக்கை

    சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று படவிழா ஒன்றில் கே பாக்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    ரைட் வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் `சதுர அடி 3500'. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.
    இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, இயக்குநர், நடிகர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில், நாயகன் நிகில் மோகன், நடிகை மேக்னா முகேஷ், இயக்குநர் ஜாய்சன், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், எடிட்டர் ஆனந்த், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.கோபி, படத்தின் விநியோகஸ்தர் ராகுல், கவிஞர் பிறைசூடன், இயக்குநரும் நடிகருமான ராம்தாஸ், தயாரிப்பாளர் கே ராஜன், இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். படத்தின் நாயகி இனியா, நடிகர் ரகுமான் பங்கேற்கவில்லை. இதனால் படக்குழுவினர் அதிருப்தி அடைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில்,

    " `சதுர அடி 3500' படத்தின் இசை வெளியீட்டு விழா மகிழ்ச்சியாக தொடங்கி, விவாத மேடையாக மாறிவிட்டது. நடிகை இனியா இப்படவிழாவில் கலந்து கொள்ளாதது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனது கருத்து என்னவென்றால், அவர்கள் வராததால் நஷ்டம் அவருக்குதான் ஒழிய படக்குழுவிற்கு இல்லை என்றார். 



    எல்லா தியேட்டர்களிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது. எப்போது பார்த்தாலும் பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் தான் ஒடவேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே? ஒவ்வொரு தியேட்டரிலும் சிறிய படங்களுக்கு காட்சிகளை ஒதுக்கவேண்டும்.

    அதற்காக காலை காட்சியை ஒதுக்கக் கூடாது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்த படத்தை காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதை காரணமாக காட்டி தியேட்டரிலிருந்து படத்தை தூக்கிவிடுகிறார்கள். படம் பார்த்த ரசிகர்களின் விருப்பம் பரவுவதற்குள் படத்தை தூக்கிவிட்டால் சின்ன படங்கள் எப்படி ஒடும்? அதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு  தியேட்டர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும்.

    இந்த படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் இது ஒரு சஸ்பென்ஸ் படமாக இருக்கும் என்று நினைத்தேன். இந்த வருடமே ஒரு சஸ்பென்ஸான வருடம் தான். ஜெயலலிதா அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்தது சஸ்பென்ஸாக இருந்தது. அதற்கு பின் இவர்கள் வருவார்களா? அவர்கள் வருவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் இவர்கள் அங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? அவர்கள் இங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தலில் வெங்கய்ய நாயுடுவுக்கு அந்த கட்சிகாரர்களே ஒட்டுபோடுவார்களா? மாட்டார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்துகொண்டே இருக்கிறது.

    இது போல் ஏகப்பட்ட சஸ்ன்ஸ்களுடன் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த `சதுர அடி 3500' படம் வெளியாவது விசேஷம்".

    இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
    Next Story
    ×