search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மக்களின் இதயத்தில் இடம்பிடித்த அபூர்வ பெண்மணி ஜெயலலிதா: நடிகர் சிவகுமார் இரங்கல்
    X

    மக்களின் இதயத்தில் இடம்பிடித்த அபூர்வ பெண்மணி ஜெயலலிதா: நடிகர் சிவகுமார் இரங்கல்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார். அவரது உடல் நேற்று சென்னை ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரைப்பட நட்சத்திரங்களும், ஏராளமான பொதுமக்களும் நேரில் சென்று ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து பல்வேறு பிரமுகர்களும் மறைந்த ஜெயலலிதாவுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகுமார் தனது குடும்பத்துடன் நேற்று ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இன்று, அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    அதில் அவர் கூறும்போது, மனித இனம் தோன்றிய நாள் முதல் நாம் பெண்களை கொத்தடிமைகளாக, சம்பளமில்லாத வேலைக்காரிகளாக, பிள்ளை பெறும் எந்திரமாகவே நடத்தி வந்திருக்கிறோம். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், டெமஸ்தனிஸ், டால்ஸ்டாய், காந்திஜி உள்பட பல மேதைகள் பெண்களை இரண்டாம் தரத்தில் வைத்தே பார்த்திருக்கிறார்கள்.

    அந்தப் பெண் இனத்தில், கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இடம்பிடித்த அபூர்வப் பெண்மணி ஜெ. அம்மையார். இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர், இந்திய பிரதமர் இந்திரா காந்தி வரிசையில் இன்னொரு இரும்பு பெண்மணியாக மதிக்கப்பட்டார்.

    திரையுலகில் கதாநாயகியாகவே துவக்கத்திலிருந்து நடித்து ராணியாகவே வாழ்ந்தவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் 116 படங்களில் நடித்தார். அதில் எட்டுப் படங்களில் அவரோடு நானும் நடித்திருக்கிறேன். 'கந்தன் கருணை'யில் அவர் வள்ளியாகவும் நான் முருகனாகவும், 'கிருஷ்ண லீலா' வில் அவர் பாமாவாகவும் நான் கிருஷ்ணனாகவும் நடித்தோம்.

    40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சக கலைஞனை மதித்து, என் குழந்தைகள் மூவரின் திருமணத்திற்கும் தவறாது வந்து ஆசி கூறிச் சென்றார். அரசியலில் கால்பதித்து 34 ஆண்டுகள் ஆகின்றன. அதில் 15 ஆண்டுகள் பதவியில் இருந்திருக்கிறார். அம்மா, அப்பா உயிரோடு இல்லை. சொந்த பந்தம் என்று சொல்லிக் கொள்கிறாற் போல, அவரோடு கூட யாரும் இல்லை.

    தனியாளாக, அசாத்தியத் துணிச்சலுடன் ஆணாதிக்க அரசியல் உலகில் கால்பதித்து, கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்று 5 முறை அவர் முதல்வரானது சரித்திர சாதனை. கண்ணீர் சிந்தும் கோடி மக்களில் இப்போது நானும் ஒருவனாய் நிற்கிறேன். இறுதி அஞ்சலி செலுத்த, குடும்பத்தினருடன் சென்றேன். சூர்யா, கார்த்தி சென்று மரியாதை செய்து வந்தனர். அவர் ஆத்மா சாந்தி அடைவதாக..

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×