search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் சிவகுமாரின் ஓவிய கண்காட்சி தொடங்கியது
    X

    நடிகர் சிவகுமாரின் ஓவிய கண்காட்சி தொடங்கியது

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில், நடிகர் சிவகுமாரின் ஓவிய கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியை நடத்த அவரது மகன்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். அதன்படி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் சிவகுமாரின் ஓவிய கண்காட்சி நேற்று தொடங்கியது.

    கண்காட்சியை சென்னை, அரசு கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர் அல்போன்ஸா தாஸ் தொடங்கி வைத்தார். அப்போது, நடிகர்கள் சிவகுமார், கார்த்தி மற்றும் ஓவியர்கள் தியாகு, மணியம் செல்வன், சந்தானம், ஏ.பி.ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இறுதி நாளன்று, சிவகுமாரின் 140 ஓவியங்கள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்படுகிறது.

    கண்காட்சியில், சிவகுமார் 1958 முதல் 1965 வரையிலான காலகட்டத்தில் பென்சில், கிரேயான், வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங் ஆகியவற்றை பயன்படுத்தி வரைந்த 100-க்கும் மேற்பட்ட படங்கள் இடம் பெற்றன. இதில் பிரபல தலைவர்களின் ஓவியங்கள் மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய தலங்களின் ஓவியங்களும் இடம் பெற்றிருந்தன.

    தொடக்க நிகழ்ச்சியின் போது நடிகர் சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம் 10 ஆயிரத்து 500 கம்ப ராமாயண பாடல்களை 100 ஆக சுருக்கி சொற்பொழிவு நிகழ்த்தியது. இது 80 நாடுகளில் ஒளிபரப்பானது. அடுத்து நான் வரைந்த ஓவியங்கள் இன்று கண்காட்சியாக வைத்திருப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம். நான் எப்போதும் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை.

    எனது 75-வது பிறந்தநாளையொட்டி, இது போன்ற கண்காட்சியை நடத்த என் மகன்கள் ஏற்பாடு செய்ய என்னிடம் அனுமதி கேட்டனர். ஓவியம் என்பதால் நானும் ஒப்புக் கொண்டேன். 14 வயது முதல் 24 வயது வரை நான் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

    இவற்றை பார்க்கும் போது, 50 வருடம் பின்னோக்கி போன மகிழ்ச்சி இருக்கிறது. எப்படி ஒரிஜினலாக நான் வரைந்திருந்தேனோ! அதை அப்படியே பிரிண்டு எடுத்து கொடுத்து இருக்கிறார்கள். எனக்கு பிறகும் அடுத்த தலைமுறைக்கு பயன்படும் வகையில் என் ஓவியங்களை உலக தரம் வாய்ந்த புத்தகமாக தயாரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் கார்த்தி கூறியதாவது:-

    எனது தந்தை ஒரு நடிகர் என்பதை விட ஒரு பெயிண்டர் என்பதையே பெருமையாக கருதுவார். எல்லா பெயிண்டிங்கையும் மிகவும் பத்திரப்படுத்தி வைத்திருப்பார். உறவினர்கள், நண்பர்களிடம் பெயிண்டிங்கை காண்பித்துவிட்டு வீட்டில் பத்திரமாக வைத்து விடுவார். எனக்கு தெரிந்து ஒரே ஒரு பெயிண்டிங் மட்டும் யாரோ ஒருவருக்கு கொடுத்ததாக ஞாபகம் இருக்கிறது.

    எனது தந்தை ஒரு கோடு வரைந்தால் அதை திருத்துவது இல்லை. அவ்வளவு நேர்த்தியாக படம் வரைவார். அவரது படைப்புகள் இப்போதும் புத்தம் புதிதாக உள்ளன.

    என் தந்தை பிறந்தநாளுக்கு கேக் வெட்ட கூட அனுமதிக்க மாட்டார். அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஓவிய கண்காட்சி நடத்த வேண்டும் என்று நினைப்பது உண்டு. இப்போது 75-வது பிறந்தநாளில் அது நிறைவேறி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×