search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தாய்மாமன் படத்தில் சத்யராஜ் பேசிய அதிரடி அரசியல் வசனங்கள் - திரை உலகில் பெரும் பரபரப்பு
    X

    தாய்மாமன் படத்தில் சத்யராஜ் பேசிய அதிரடி அரசியல் வசனங்கள் - திரை உலகில் பெரும் பரபரப்பு

    "தாய் மாமன்'' படத்தில், அரசியல்வாதிகளை சகட்டு மேனிக்கு தாக்கி வசனம் பேசினார் சத்யராஜ். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
    "தாய் மாமன்'' படத்தில், அரசியல்வாதிகளை சகட்டு மேனிக்கு தாக்கி வசனம் பேசினார் சத்யராஜ். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குருதனபால் டைரக்ஷனில் உருவான "தாய்மாமன்'' படத்தில், படம் முழுவதும் கறுப்புத்துண்டு போட்டு நடித்தார், சத்யராஜ்.

    சத்யராஜின் ஜோடியாக நடிகை மீனா நடித்த முதல் படம் இதுதான். இந்த வகையில் சத்யராஜின் உயரமான கதாநாயகிகள் பட்டியலில் மீனாவும் இடம் பெற்றார்.

    இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "தயாரிப்பாளரும் டைரக்டருமான எம்.பாஸ்கர் "தீர்ப்புகள் திருத்தப்படலாம்'' என்ற படத்தை எடுத்தபோது சிவகுமார் நாயகன். நான் வில்லன். இந்தப் படத்தில் குழந்தையாக நடித்தவர் மீனா.

    கால ஓட்டத்தில் "தாய்மாமன்'' படத்தில் மீனா எனக்கு ஜோடியாகி விட்டார்.

    இந்தப்படத்தை இயக்கிய குருதனபால் என் பாணியில் தயார் செய்த இந்தக் கதையும் ரசிகர்களிடம் பெருவாரியான வரவேற்பை பெற்று, படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது. அமைதிப்படையில் நானும் மணிவண்ணனும் காமெடியில் கலக்கியது போல, இந்தப் படத்தில் என்னுடன் காமெடிக்கு கைகோர்த்தவர் கவுண்டமணி அண்ணன்.

    படத்தை முடிக்கும்போது அதுவரை யாரும் செய்திராத ஒரு புரட்சியையும் டைரக்டர் செய்திருந்தார். எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடலான `உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்'' என்ற பாடலில் வரும் `மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்குமாலைகள் விழவேண்டும்' என்ற வரிகளுடன் படத்தை முடித்தார். இது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

    படம் வெளிவந்தபோது பார்த்த ஒரு பிரபல ஹீரோ எனக்கு போன் செய்து, "என்ன இப்படி பண்ணிட்டீங்க?'' என்று கேட்டார். படத்தில் நான் பேசிய அரசியல் தொடர்பான வசனங்கள் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

    இப்படி படத்தில் காரசாரமான வசனங்கள் இருப்பது ரஜினி சாருக்கு தெரியவர, ஒரு மாலை நேரம் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். நான் உங்க `தாய்மாமன்' படம் பார்க்கணுமே என்றார்.

    ஒரு படம் பேசப்படுகிறது என்றால், அந்தப் படத்தை பார்க்க ரஜினி சார் விரும்புவார். `அமைதிப்படை' படத்தில் நான் வில்லனாகவும் நடித்தது தெரியவந்ததும் இதே மாதிரி என்னிடம் கேட்டுக்கொண்டு அந்தப் படத்தை பார்த்தார். படம் முடிந்ததும், "இப்ப எனக்கே மறுபடியும் வில்லனாக நடிக்கும் ஆசை வந்திருக்கு'' என்று பாராட்டினார்.

    இப்போது `தாய்மாமன்' படம் பற்றி கேள்விப்பட்டு பார்க்க விரும்ப, உடனடியாக பிலிம் சேம்பர் திரையரங்கில் ஏற்பாடு செய்தேன்.

    படம் முடிந்ததும் என் கைகளை பற்றிக் கொண்டவர், "ரொம்ப ஓவர் தைரியம் உங்களுக்கு! இந்த மாதிரி வசனங்களை பேசும்போது பயம் ஏற்படவில்லையா?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "நான் ஏன் சார் பயப்படணும்? நான் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இருந்தால் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் நான் அவர்களை தாக்கியதாக எண்ணிக் கொள்வார்கள். நான்தான் எந்தக் கட்சியிலும் இல்லையே! எனவே படத்தில் நான் பேசிய வசனங்களை கதையோடு ஒட்டிய விஷயங்களாக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்'' என்றேன்.

    அப்போதும் அவருக்கு மனது கேட்கவில்லை. என் நடிப்பு வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுமோ என்று கவலை தெரிவித்தார். இப்போது நான் தெளிவாக, "நான் பொதுவானவன். போதுமானவன் என்றேன். கட்சி எதையும் சாராமல் பொதுவாக நான் பேசிய இந்த வசனங்கள் என் நடிப்பு வாழ்க்கையை பாதித்தால் அதற்காக எனக்கு கவலையில்லை. இதுவரை நடித்து சம்பாதித்தது போதும் என்ற மன நிறைவுடன் இருந்து விடுவேன்'' என்றேன்.

    ரஜினி சார் என்னிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் கைகுலுக்கி, தோளில் தட்டிக்கொடுத்து விட்டு சென்றார். அவரைப் பொறுத்தவரையில் நண்பர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புபவர். நான் "ஓஷோ'' புத்தகங்களை விரும்பி படிப்பதை தெரிந்து கொண்டவர் வீட்டுக்கு வரவழைத்து "ஓஷோ'' தத்துவங்களுடன் கூடிய வீடியோ கேசட்டை கொடுத்தார். அதோடு `லைனிங் வித் எ ஹிமாலயா மாஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தையும் தந்து அனுப்பினார்.

    நாலே நாளில் எனக்கு போன் செய்தவர், "புத்தகம் படித்தீர்களா? எப்படி இருந்தது?'' என்று கேட்டார்.

    நமக்குத்தான் இங்கிலீஷ் தட்டுத்தடுமாறுமே! மெதுவாக நிதானமாக படித்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அதனால் அவரிடம் "சார்! இங்கிலீஷ் புத்தகம்னா கொஞ்சம் டைம் எடுத்தே படிக்கணும். அதனால ஒரு மூணு மாசமாவது கொடுங்க'' என்றேன். எதிர்முனையில் ரஜினி சார் சிரித்தது கேட்டது.

    இந்தப் படத்தை பார்க்க வைகோவும் விரும்பினார். குட்லக் தியேட்டரில் படம் பார்க்க வந்த அவரை வரவேற்க தியேட்டர் வாசலில் காத்திருந்தேன். படம் தொடங்கும் நேரம் வரை அவர் வரவில்லை. அப்புறம் விசாரித்தபோதுதான், `வைகோ வந்து அரை மணி நேரம் ஆயிற்று' என்றார்கள். வழக்கமாக வேட்டி - சட்டை - கறுப்புத்துண்டு சகிதம் வருவார் என்று எதிர்பார்த்து நான் நிற்க, அவரோ சாம்பல் கலர் சபாரி உடையில் வந்திருக்கிறார். என்னைக் கடந்துதான் தியேட்டருக்குள் போயிருக்கிறார். நான் கவனிக்கவில்லை.

    அவரை சந்தித்து நான் வருத்தம் தெரிவித்தபோது, "நானும் உங்களை பார்க்க முடியாததால்தான் தியேட்டரின் முதல் மாடிக்கு வந்துவிட்டேன்'' என்று சிரித்தார். படத்தைப் பார்த்துவிட்டு அவர் ரொம்பவும் பாராட்டியது தனிக்கதை.

    டைரக்டர் குருதனபாலின் அடுத்த படமான "மாமன் மகள்'' படத்திலும் மீனாவே என் ஜோடியாக நடித்தார். இந்தப் படமும் வெற்றி பெற்றது. இதே டைரக்டர் பின்னாளில் தயாரிப்பாளராகி என்னை இயக்கிய `பெரிய மனுஷன்' படம் பெரிதாக ஓடவில்லை. அதுவும் `லொள்ளு ஜொள்ளு' படம்தான். ஆனால் `ஜொள்ளு' அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்கள் எண்ணினார்களோ என்னவோ!''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    Next Story
    ×