

உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் காரணமாக, நடப்பு 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனை 4% சரிவைச் சந்தித்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடுமையான சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது உலகளவில் நிலவி வரும் RAM மற்றும் மெமரி சிப்களின் தட்டுப்பாடுதான்.
தற்போதைய சூழலில் மெமரி சிப் தயாரிப்பு நிறுவனங்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்களை விட செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கு தேவையான சிப்களை தயாரிப்பதற்கே முன்னுரிமை அளித்து வருகின்றன. இதன் காரணமாக ஸ்மார்ட்போன்களுக்கான உதிரிபாகங்களின் விலை 4 முதல் 5 மடங்கு வரை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, பட்ஜெட் மற்றும் நடுத்தர விலை ஸ்மார்ட்போன்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இது நுகர்வோரின் வாங்கும் திறனைக் குறைத்து, சந்தையில் பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், தென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் 24% பங்குகளைப் பிடித்து சாம்சங் நிறுவனம் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த இமாலய வெற்றிக்கு அதன் பிரீமியம் ரக போன்களான Galaxy S26 தொடர் Galaxy S26 Series போன்களின் அசுர விற்பனையே முக்கியக் காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, அதன் உயர் ரக மாடலான Galaxy S26 Ultra போன்களின் விற்பனை உலகளவில் அமோகமாக இருந்துள்ளது.
சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் 20% சந்தைப் பங்குகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
எனினும், பட்ஜெட் போன்களை அதிகம் நம்பியிருக்கும் சீன நிறுவனங்களான சியோமி, ஓப்போ, மற்றும் விவோ ஆகிய முன்னணி பிராண்டுகள் இந்த காலாண்டில் இரட்டை இலக்க விற்பனை சரிவைச் சந்தித்துப் பின்னடைவை எதிர்கொண்டுள்ளன.
மெமரி சிப் தட்டுப்பாட்டால் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையும் சரிவை நோக்கிச் சென்றாலும், சாம்சங் தனது Galaxy S26 தொடரின் பலத்தால் சரிவிலிருந்து மீண்டு உலக அரங்கில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது.