என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuldeep Singh Sengar"

    • உச்ச நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, நீதி கிடைக்கும்
    • குல்தீப் சிங் செங்காருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் மரணமடைந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    செங்காரின் மேல்முறையீட்டு மனுவை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து பிணை வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த முடிவால் தான் நிம்மதி அடைந்துள்ளதாகவும், எட்டு ஆண்டுகளாக நீதி கிடைக்கப் போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு தொடர்பாக பேசிய அவர்,

     "இன்று நான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றேன். நீதிபதி தீர்ப்பளித்தபோது நான் நீதிமன்றத்தில் இருந்தேன். இந்தத் தீர்ப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விசாரணையை 3 மாதங்களுக்குள் விரைவில் முடிக்க நீதிபதி உத்தரவிட்டதில் நான் திருப்தி அடைகிறேன். என் தந்தை திரும்பி வரப்போவதில்லை. குல்தீப் செங்காரின் சகோதரர்கள் அதுல் சிங் செங்கார் மற்றும் ஜெய்தீப் சிங் செங்கார் ஆகியோர் என் தந்தையைக் கொன்றனர்.

    அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் வெளியே உள்ளனர். குல்தீப் சிங் செங்காரைப் பொறுத்தவரை, அவர் எனக்கு எதிராக ஒரு கொடூரமான செயலைச் செய்துள்ளார். அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். நான் அதை எப்படி நிரூபிக்க முடியும்? நான் உயிருடன் இருக்கிறேன் என்பதற்காக அதை செய்யவேண்டுமா?

    நானும் நிர்பயா மாதிரி இறந்திருந்தால், நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன் என்று எல்லோரும் நம்பியிருப்பார்கள். நான் உயிருடன் இருக்கிறேன். எனக்கு என்ன நடந்தது என்பதை நிரூபிக்க பல வருடங்கள் ஆனது. நான் 8 வருடங்களாக போராடி வருகிறேன். இப்போதும் கூட, நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    அவரது மகள் இது ஒரு சாதாரண விபத்து என்று கூறினார். விபத்து சாதாரணமானதா என்று எனக்குத் தெரியவில்லை. நான் வென்டிலேட்டரில் இருந்தேன். என் தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நீதி வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்துள்ளேன். என் தந்தையின் ஆன்மா சாந்தியடையவும், அவருக்கு நீதி கிடைக்கவும் குல்தீப் செங்காரை தூக்கிலிட வேண்டும்." என தெரிவித்துள்ளார். 

    ×