விம்பிள்டன் டென்னிஸ்: ராயல் பாக்ஸில் சச்சின்-சுப்மன் கில்! வைரலாகும் லண்டன் புகைப்படங்கள்!

கிரிக்கெட் உலகின் பேரரசர் மீண்டும் ராயல் பாக்ஸிற்குத் திரும்பியுள்ளார்.
Sachin-Shubman Gill in Royal Box
Published on

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ராயல் பாக்ஸில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தற்போதைய இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து போட்டியை கண்டுகளித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

விம்பிள்டன் ராயல் பாக்ஸில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்:

லண்டனில் உள்ள ஆல் இங்கிலாந்து கிளப்பில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் வருகை தந்திருந்தார். இவர்களுடன் இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில்லும் இணைந்து ராயல் பாக்ஸில் அமர்ந்து போட்டியை ரசித்தார்.

அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மற்றும் பிரிட்டனின் ஆர்தர் ஃபெரி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியை இவர்கள் நேரில் கண்டுகளித்தனர். இதில் ஸ்வெரெவ் நேர் செட்களில் வெற்றி பெற்று தனது முதல் விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

சிறப்பு கவுரவம் பெற்ற சுப்மன் கில்:

விம்பிள்டன் வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க 'ராயல் பாக்ஸ்' இருக்கையில் அமர்ந்து போட்டி காண அழைக்கப்படும் 4-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை 'சுப்மன் கில்' பெற்றுள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு மட்டுமே இந்த கவுரவம் கிடைத்துள்ளது.

மேலும், இந்த விம்பிள்டன் பயணத்தின் போது டென்னிஸ் உலகின் ஜாம்பவான் 'ரோஜர் பெடரரை' சுப்மன் கில் நேரில் சந்தித்துப் பேசினார். இவர்கள் இருவரும் உரையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகின்றன.

சச்சினுக்கு விம்பிள்டன் நிர்வாகம் வாழ்த்து:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் வருவது வழக்கமான ஒன்று என்றாலும், இந்த ஆண்டும் அவரது வருகையைக் கொண்டாடும் விதமாக விம்பிள்டன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "கிரிக்கெட் உலகின் பேரரசர் மீண்டும் ராயல் பாக்ஸிற்குத் திரும்பியுள்ளார்.

விம்பிள்டனுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம், சச்சின்!" என்று பதிவிட்டுள்ளது. மேலும், போட்டியின் நேரடி ஒளிபரப்பின் போது வர்ணனையாளர்கள் சச்சினை "வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்" என்று புகழ்ந்தனர்.

பிரிட்டன் சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. வரும் 14 முதல் தொடங்கவுள்ள இந்தத் தொடருக்கு முன்னதாகக் கிடைத்த சிறிய இடைவெளியில் சுப்மன் கில் விம்பிள்டன் போட்டிக்கு வருகை தந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கில் சில்வர்ஸ்டோனில் நடந்த பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஃபார்முலா1 பந்தயத்தையும் விஐபி விருந்தினராக நேரில் சென்று ரசித்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com