

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதலில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-0 என வென்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.
இந்நிலையில், தொடரில் வெற்றி பெறப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணியில் ரோகித் சர்மா கடந்த இரு போட்டிகளில் முறையே 11, 26 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். தடுமாற்றத்தைச் சந்தித்து வரும் அவரது ஆட்டம் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாகி இருக்கிறது.
மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இரண்டாவது போட்டியில் 65 ரன் எடுத்த இவர் மீண்டும் கைகொடுக்கலாம். ஷ்ரேயஸ் ஐயர் (101) நம்பிக்கை தருகிறார். மிடில் ஆர்டர் சரிவை தடுத்து நிறுத்தினால் இங்கிலாந்து அணிக்கு இமாலய ஸ்கோரை நிர்ணயிக்கலாம்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் அனுபவ வீரர் ஜோ ரூட் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார் அவர் இதுவரை 2 போட்டியில் 175 ரன் எடுத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.
காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷ் துபே சேர்க்கப்பட உள்ளார்.
இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
தொடரை வெல்ல சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மல்லுக் கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.