

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.5 ஓவரில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 65 ரன்னில் வெளியேறினார்.
அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்க் சாப்மேன், பிரேஸ்வெல் தலா 27 ரன்கள் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், வைடல் லாவெஸ் 3 விக்கெட்டும், குடகேஷ் மோடே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் 11 ரன்னில் அவுட்டானார்.
2-வது விக்கெட்டுக்கு அக்கீம் அகஸ்டே, கெய்சி கார்டி ஜோடி இணைந்து 64 ரன்கள் சேர்த்த நிலையில், அக்கீம் அகஸ்டே 38 ரன்னில் அவுட்டானார்.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த கெய்சி கார்டி-ஷாய் ஹோப் ஜோடி பொறுப்புடன் ஆடி 131 ரன்கள் சேர்த்தது.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கெய்சி கார்டி 95 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 48.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் 87 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்ட நாயகன் விருது கெய்சி கார்டிக்கு அளிக்கப்பட்டது.