

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு போட்டிகள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 37.1 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணியின் கெய்சி கார்டி 48 ரன்னில் வெளியேறினார். அக்கீம் அகஸ்டி, ஹெட்மயர் தலா 26 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் ஜெய்டன் லெனாக்ஸ் 4 விக்கெட்டும், பிரேஸ்வெல், சாண்ட்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 23 ரன்னில் அவுட்டானார். டேரில் மிட்செல் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு இணைந்த டாம் லாதம், பார்க்ஸ்கிராப்ட் ஜோடி 52 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், நியூசிலாந்து அணி 39.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாம் லாதம் 31 ரன்னும், பாக்ஸ்கிராப்ட் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
ஆட்ட நாயகன் விருது ஜெய்டன் லெனாக்சுக்கு அளிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி பார்படாசில் நடைபெற உள்ளது.