

திமுக வேட்பாளர் தாயகம் கவி சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 1,15,000
2. அசையும் சொத்து- ரூ. 34,00,569
3. அசையா சொத்து- ரூ. 1,38,15,000
தமாகா வேட்பாளர் கல்யாணி சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 30,000
2. அசையும் சொத்து- ரூ. 8,17,740
3. அசையா சொத்து- ரூ. 58,00,000
சென்னையில் பெரம்பூர் அருகே உள்ள தொகுதிதான் திரு.வி.க.நகர். இந்த தொகுதி 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். பெரம்பூர் தொகுதியில் இருந்து 4 இடங்களும், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து 2 இடங்களும், எழும்பூர் தொகுதியில் இருந்து சில பகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட தொகுதி திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதியாகும்.
சென்னை மாநகராட்சியின் வார்டு 37 முதல் 41 வரை, 59, 60 மற்றும் 70, 71, 72, 73, 74, 75, 76 பகுதிகளை உள்ளடக்கியது. பிரபலமான பின்னி மில் இந்த தொகுதியில்தான் உள்ளது.
ஒரு காலத்தில் ஒட்டு மொத்த சென்னைக்கும் வாழ்வாதாரமாக இருந்த பின்னி மில் இப்போது செயல்படாமல் இருக்கிறது. பின்னி மில்லில் வேலை செய்வதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு குடியேறிய மக்கள் அதிகம் பேர் இருந்தனர். அவர்களில் பலர் இந்த தொகுதியில் இருந்தாலும் தற்போது வேறு வேலை பார்த்து வருகின்றனர்.
இந்தியாவில் முதலாவது தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் பின்னி மில்லில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது. அதை தொடங்கியவர்களில் ஒருவரான பிரபல தொழிற்சங்கவாதியும், தமிழ் அறிஞருமான திரு.வி.கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.) பெயரில் இந்த தொகுதி உருவாகி உள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின்போதுதான் இந்த தொகுதி உருவாக்கப்பட்டதால் இந்த தொகுதிக்கு என்று பிரத்யேகமான தேர்தல் வரலாறு கிடையாது.
இந்த தொகுதியில் பெரம்பூர் பஸ் நிலையம், ஜமாலியா, மங்களா புரம், ஆடுதொட்டி, கன்னியாபுரம் விளையாட்டு திடல், மூலிகை பூங்கா, புளியந்தோப்பு, ஸ்டெகான் ரோடு, அலெக்சாண்டர் தெரு, ஓட்டேரி, எஸ்.எஸ்.புரம், டோபிகானா (சலவையர் குடியிருப்பு), கே.எம்.கார்டன், டிக்காஸ்டர் ரோடு, சரவணா தியேட்டர், வாழைமா நகர் ஆகியவை பிரபலமான பகுதியாகும்.
நகரப்பகுதியாக இருந்தாலும் பார்ப்பதற்கு கிராமப் பகுதிபோல் வீடுகள் இந்த தொகுதியில் அதிகம் காணப்படும். குறுகிய இடத்தில் அதிக மக்கள் வசிக்கும் இடமாக இப்பகுதி காணப்படுகிறது.
இன்னும் தொழிலாளர்கள் நிறைந்த இடமாக திரு.வி.க.நகர் திகழ்கிறது. அரசு ஊழியர்கள், வணிகர்கள் ஆகியோரும் இந்த தொகுதியில் கணிசமாக உள்ளனர். தொழிற்சங்கவாதிகளும், கம்யூனிஸ்டு இயக்க தோழர்களும் இங்கு நிரம்பி உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிகம் வசிக்கிறார்கள். அது தவிர இஸ் லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சமுதாயத்தை சார்ந்தவர்களும் பரவலாக உள்ளனர்.
மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்ட போது இந்த தொகுதி முழுவதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வர சில வருடங்கள் ஆனது. ஆனாலும் அரசு மேற்கொண்ட சிறப்பு கவனத்தால் சாலை வசதிகள் புதுப்பிக்கப்பட்டன.
ஆகாயதாமரை நிரம்பி வழிந்த நல்லான் கால்வாய் தூர் வாரப்படாமல் கிடந்தது. கழிவுகள் கொட்டப்பட்டு சாக்கடையாக கிடந்த நல்லான் கால்வாய் சமீபத்தில்தான் தூர் வாரப்பட்டது. இதனால் நீரோட்டம் தடையின்றி செல்கிறது. அதை சுற்றியுள்ள பகுதிகளில் வடிகால் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்போது பெய்த மழைக்கு திரு.வி.க.நகர் வெள்ளத்தில் இருந்து தப்பியது. தற்போது பெரம்பூருக்கு நிகராக திரு.வி.க.நகர் தொகுதியும் வேகமாக வளர்ந்து வருகிறது. திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. ஒரு முறை வெற்றி பெற்று இருக்கிறது.
2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ப.நீலகண்டன் (அ.தி.மு.க.) வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு தேர்தலில் தாயகம் கவி (தி.மு.க.) வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் த.மா.கா., தி.மு.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய 5 கட்சி கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தி.மு.க. சார்பில் கடந்த போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான தாயகம் கவி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்யாணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது தவிர தே.மு.தி.க. சார்பில் சேகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஓபேத், நாம் தமிழர் கட்சியில் டாக்டர் இளவஞ்சியும் போட்டியிடுகிறார்கள்.
வாக்காளர்கள்- 2,20,818
ஆண்கள்- 1,07,090
பெண்கள்- 1,13,676
மூன்றாம் பாலினம்- 52
2011 தேர்தல் முடிவு
ப.நீலகண்டன் (அ.தி.மு.க.)- 72,887
டாக்டர் நடேசன் (காங்கிரஸ்)- 43,546
2016 தேர்தல்
தாயகம் கவி (தி.மு.க)- 61,744
ப.நீலகண்டன் (அ.தி.மு.க)- 58,422
சுகந்தி (சி.பி.எம்.)- 5,702
வளர்மதி (பா.ம.க.)- 2,056
நோட்டா- 2,685