

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை உள்ளடக்கியது ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி.
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை, வாலாஜா, மேல்விஷாரம், ஆகிய மூன்று நகரசபைகளும், வாலாஜா ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளும், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளும் அடங்கியுள்ளது. மேலும் அம்மூர் பேரூராட்சியும் இதில் அடங்கியுள்ளது.
ராணிப்பேட்டை நகரம் 30 வார்டுகளும், வாலாஜா நகரம் 24 வார்டுகளும், அம்மூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும் உள்ளன. இந்த தொகுதியில் தற்போது 2 லட்சத்து 65 ஆயிரத்து 626 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 28 ஆயிரத்து 391 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 219 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 16 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதியாக ராணிப்பேட்டை தொகுதி விளங்குகிறது. இந்த தொகுதியில் வாக்களிக்க 283 வாக்குசாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'பெல்' தொழிற்சாலை அமைந்துள்ளது. மேலும் ஆன்சிலரி தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், பீங்கான் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், சிப்காட் தொழிற்பேட்டையும் மற்றும் வி.சி.மோட்டூர் மாந்தாங்கள் போன்ற பகுதிகளில் ஷு கம்பெனிகள், தோல் பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் இந்த தொகுதியில் இயங்கி வருகிறது.
மேலும் வாலாஜா பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலைகளும் பிரம்பால் உருவாக்கும் நாற்காலி தொழிலும் நெசவு தொழிலும் கொண்டது வாலாஜா நகரமாகும். ராணிப்பேட்டையில் பழமை வாய்ந்த ஸ்கடர் மருத்துவமனை,பீட்டி மெமோரியல் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், புகழ்பெற்ற ராணிப்பேட்டை வாரசந்தை, புகழ்பெற்ற ரத்தினகிரி பாலமுருகன் கோவில், லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி கோவில் மற்றும் வாலாஜாவில் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. மேலும் புகழ்பெற்ற ஸ்தலமாக வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் மஞ்சள் காமாலைக்கு பச்சிலை மருந்து தரும் வைத்திய சாலை ஆகியவை இந்த தொகுதியில் அமைந்துள்ளது.
மேலும் வரலாற்று சின்னமான ராணிப்பேட்டை பெயர் வரக் காரணமான ராஜா தேசிங்கு, ராணி நினைவு சின்னமும், பாலாற்றங்கரை அருகே உள்ளது.
ஆசிய அளவில் புகழ்பெற்ற கால்நடைகளுக்கான மருந்துகள் தயாரிக்கும் ஐ.வி.பி.எம் மருந்து ஆராய்ச்சி நிலையம், லட்சம் கணக்கில் மரங்கள் இருந்ததாக கூறப்படும் நவ்லாக் விவசாய பண்ணையும் இந்த தொகுதியில் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் ஆற்காடு ஒன்றியத்தில் சில பகுதிகளிலும், வாலாஜா ஒன்றியத்தில் சில பகுதிகளில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொகுதியில் 1952-ல் இருந்து காங்கிரஸ் 3 முறையும், தி.மு.க 6 முறையும் அ.தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் ஒன்றிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
காட்பாடி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான துரைமுருகன் ராணிப்பேட்டை தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது ராணிப்பேட்டை தொகுதி தி.மு.க. வசம் உள்ளது. இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஆர்.காந்தி உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் தி.மு.க செயலாளராக பதவி வகிக்கின்றார். மேலும் இவர் ராணிப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 3 முறை இருந்துள்ளார்.
இத்தொகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர் ஆகிய மக்கள் பெரும்பாலானோர் வசிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள், யாதவர், நாயுடு, சௌராஷ்ட்ரா, கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய தொகுதியாக ராணிப்பேட்டை தொகுதி உள்ளது.
தொகுதியில் உள்ள பிரச்சினைகள்:
ராணிப்பேட்டை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் புதிய மாவட்டத் தலைநகர் என்று சொல்லிக் கொள்கின்ற அளவிற்கு எந்த வசதியும் இதுவரை செய்யப்படவில்லை.
இத்தொகுதியில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் மாசடைந்து உள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அனைத்து பகுதிகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். சிப்காட்டில் மூடப்பட்டுள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். நவ்லாக் பண்ணையில் வேளாண்மை கல்லூரி தொடங்கப்பட வேண்டும். வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் எல்லாவித நவீன உபகரணங்களும் கொண்டு வரப்படவேண்டும். அனைத்து விதமான நோய்களுக்கும் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மாவட்ட தலைநகரமான ராணிப்பேட்டையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வேகமாக கட்டி முடிக்கப்பட்டு அனைத்துத்துறை அரசு நிறுவனங்களும் ராணிப்பேட்டையில் விரைவில் அமைக்கப்படவேண்டும். சிப்காட்டில் உள்ள குரோமேட் கம்பெனியில், குரோமேட் கழிவுகள் மலை போல் குவிந்துள்ளது. இதனால் மழை பெய்யும் போது இக்கழிவுகள் மழை நீரில் கலந்து வெளியேறுவதால் இப்பகுதியில் உள்ள ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. உடனடியாக இக்கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். சென்னையிலிருந்து அனைத்து பஸ்களும் ராணிப்பேட்டை நகரின் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணிப்பேட்டை நகரில் விரைவில் பெரிய பஸ் நிலையம் கட்டப்பட்டு, இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி செய்து தரப்பட வேண்டும். வாலாஜா நகராட்சி, ராணிப்பேட்டை நகராட்சி, ஆற்காடு நகராட்சி, மேல்விஷாரம் நகராட்சி ஆகிய நான்கு நகராட்சிகளை இணைத்து தமிழகத்தில் முதல் நகராட்சியான வாலாஜா நகராட்சியை மாநகராட்சியாக்க வேண்டும்.
வாலாஜாவில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மெயின் ரோட்டில் இருபுறங்களிலும் மருத்துவமனை அமைந்துள்ளது. நோயாளிகள் சாலையின் இருபுறமும் உள்ள மருத்துவமனைக்கு சென்று வர வேண்டிய சூழல் உள்ளது இதனால் நோயாளிகள் சாலைகளை கடக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அம்மூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை நவீன மயமாக்க பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இந்த தொகுதியின் பிரச்சினைகளாக உள்ளது.
அதிமுக சார்பில் எஸ்.எம். சுகுமாரும், திமுக சார்பில் ஆர். காந்தியும் போட்டியிடுகிறார்கள்.
1952- காதர் ஷெரீப்- காங்கிரஸ்
1957- சந்திரசேகர் நாயகர்- காங்கிரஸ்
1962- அப்துல் கலீல்- தி.மு.க.
1967- அப்துல் கபூர்- முஸ்லீம் லீக்
1971- கே.ஏ.வகாப்- முஸ்லீமு லீக்
1977- துரைமுருகன்- தி.மு.க.
1980- துரைமுருகன்- தி.மு.க.
1984- கதிர்வேலு- காங்கிரஸ்
1989- என்.ஜி.வேணுகோபால்- அ.தி.மு.க.
1993- கோ.வி.எஸ்.மோகனன்அ.தி.மு.க.
1996- ஆர்.காந்தி- தி.மு.க.
2001- எம.எஸ்.சந்திரசேகரன்- அ.தி.மு.க.
2006- ஆர். காந்தி- தி.மு.க.
2011- முகம்மத்ஜான்- அ.தி.மு.க.
2016- ஆர்.காந்தி- தி.மு.க.