லார்ட்ஸ் ஒருநாள் போட்டி: வாஷிங்டன் சுந்தர் விளையாடமாட்டார் என அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் இடம் பெற வாய்ப்புள்ளது.
Kuldeep Yadav- Washington Sundar
குல்தீப் யாதவ்- வாஷிங்டன் சுந்தர்
Published on

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின்போது, ரன்எடுக்க ஓடும்போது காயம் ஏற்பட்டதால், வாஷிங்டன் சுந்தர் 3-வது போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம்

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 258 ரன்கள் அடித்தது. இந்தியா 45.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 63 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்தியா ஒரு கட்டத்தில் 160 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. இவரும் அக்சர் படேலும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் குவித்தனர். அக்சர் படேல் 52 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2-வது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றம்

2-வது போட்டி கார்டிஃபில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 233 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ரோகித் சர்மா (26), சுப்மன் கில் (31), விராட் கோலி (65), ஷ்ரேயாஸ் அய்யர் (66) ஆகியோர் கவுரவமான ரன்கள் அடித்த போதிலும், மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த போடடியில் வாஷிங்டன் சுந்தர் 5 பந்தில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர் மிட்ஆஃப் திசையில் பந்தை அடித்து ரன் எடுக்க முயன்றார். அப்போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் அக்சர் படேல் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தில் இந்த போட்டியில் கே.எல். ராகுல் விளையாடவில்லை.

பீல்டிங் செய்ய வராத வாஷிங்டன் சுந்தர்

அவருக்கு காலில் hamstring காயம் ஏற்பட்டதால், நாளை புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குல்தீப் யாதவ் நாளை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய போட்டியின் இந்தியா பீல்டிங் செய்யும்போது வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கவில்லை. அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் லார்ட்ஸ் போடடியில் இடம் பெறவில்லை.

Kuldeep Yadav
குல்தீப் யாதவ்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் 1-1 என சமநிலையில் உள்ளன. நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகள் டி20 தொடரை இந்தியா 0-4 என இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பதவியை பெற்றதும் முதல் இரண்டு (முன்னதாக அயர்லாந்து) தொடர்களையும் இழந்துள்ளது.

சுப்மன் கில் தலைமையிலான ஒருநாள் அணி நாளை வெற்றி பெற்று, டி20 தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com