1605 நாட்களுக்குப்பின் நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்திய டி20 அணி..!

இரண்டு டி20 உலக கோப்பையை வென்றெடுத்த இந்திய அணி, தொடர்ச்சியாக ஏழு போட்டியில் 6-ல் தோல்வியடைந்து பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து டி20 போட்டி
இந்தியா- இங்கிலாந்து டி20 போட்டி
Published on

இந்திய டி20 அணி கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ரோகித் சர்மா தலைமையிலும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் உலக கோப்பையை அடுத்தடுத்து வென்று சாதனைப் படைத்தது.

ஷ்ரேயாஸ் அய்யருக்கு சோதனை

சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவருக்கு முதல் இரண்டு தொடர்களும் சோதனையாக அமைந்துள்ளது எனலாம்.

அயர்லாந்து தொடரில் மோசம்

கேப்டன் பதவி ஏற்றதும் இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது. இதில் 0-2 என ஒயிட்வாஷ் ஆனது. இந்த ஏமாற்றத்துடன் இங்கிலாந்துக்கு சென்றது. அங்கேயும் அடி விழுந்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்து தொடரை இழந்தது.

இங்கிலாந்து தொடரில் 0-4 எனத் தோல்வி

5-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் இங்கிலாந்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் முனைப்பில் விளையாடியது. பட்லர் சதத்தால் இங்கிலாந்து 257 ரன்கள் குவித்தது. பின்னர் இந்தியா 201 ரன்கள் அடித்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்தியா

இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி கடைசி 7 போட்டிகளில் 6-ல் தோல்வியடைந்து ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை இழந்துள்ளது. கடந்த 1605 நாட்களாக நம்பர் ஒன் இடத்தில் கம்பீரமாக இருந்து வந்தது. தற்போது அந்த இடத்தை இங்கிலாந்து தட்டிப்பறித்தது.

கேப்டன் பதவி ஏற்றதும் முதல் இரண்டு தொடர்களும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு மறக்க முடியாத அடியை கொடுத்துள்ளது. இரண்டு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தும் பயனில்லை. 2 போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்தும் பயனில்லை. ஜாஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருதை வென்ற நிலையில், கேப்டன் ஹாரி ப்ரூக் தொடர் நாயகன் விருதை வென்றார்.

5-வது போட்டியில் இஷான் கிஷன் 56 ரன்களும், திலக் வர்மா 53 ரன்களும் எடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com