

இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல். ஜடேஜா ஒயிட்பால் கிரிக்கெட்டில் இருந்து விலக, அந்த இடத்தில் அக்சர் படேல் ஆதிக்கம் செலுத்தி முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.
இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டி அக்சர் படேலுக்கு 100-வது டி20 போட்டியாகும். இது குறித்து அவர் கூறுகையில், 100 போட்டியில் விளையாடுவேன் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்சர் படேல் கூறியதாவது:-
நான் முதல்முறையாக டி20 கிரிக்கெட்டில விளையாடும்போது, 100 போடடிகளில் விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது. இந்த இங்கிலாந்து தொடர் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனென்றால், 2வது போட்டியில் விளையாடும்போது 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன். 4-வது போட்டி என்னுடைய 100-வது டி20 போடடி. ஆகவே, இது எனக்கு சிறப்பான நாளாக இருக்கும். நான் இந்தத் தருணத்தை உண்மையிலேயே ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு விளையாட்டு வீரராக ஒரு முக்கிய மைல் கல்லை எட்டும்போது, அது என்னைப் பற்றியது மட்டுமல்ல அல்லது நான் மட்டும் அதைச் சாதிக்கவில்லை என்றே நான் உணர்கிறேன். என்னுடன் எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் உள்ளனர். எனவே, எனது இந்தப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு என்றே நான் கருதுகிறேன்.
ஒரு வீரராக தனது பயணத்தை தொடங்கி, முதன்முறையாகக் களமிறங்கும்போது ஏற்படும் உணர்வே தனித்துவமானது. அப்போது, பிற்காலத்தில் எந்தளவுக்குச் சாதிக்கப் போகிறோம் என்பது தெரிந்திருக்காது. ஆனால் இப்போது எனது 100-வது போட்டியில் விளையாடவிருக்கும் அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இந்திய அணிக்காக ஒரே ஒரு போட்டியில் விளையாடுவது கூட ஒரு வீரரைப் பொறுத்தவரை மிகப்பெரிய விஷயம். ஏனெனில், அதுவே ஒரு வீரரின் கனவாகவும் இருக்கிறது.
இவ்வாறு அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.