பெரியபாளையம் பவானி அம்மன்- தல வரலாறு

வேப்ப இலைகளை ஆடையாக உடுத்தி, அங்கப்பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.
பெரியபாளையம் தல வரலாறு
Published on

சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோவில், கம்சனிடமிருந்து தப்பிய கண்ணனின் சகோதரியான யோகமாயா வாசம் செய்யும் தலம் ஆகும்.

தல வரலாறு

துவாபர யுகத்தில், தேவகி மற்றும் வசுதேவருக்கு எட்டாவதாகப் பிறக்கும் குழந்தையால் தனக்கு மரணம் நிகழும் என்பதை அறிந்த கம்சன், அவர்களைச் சிறைவைத்தான். எட்டாவது குழந்தையாகக் கிருஷ்ணர் அவதரித்தபோது, அவர் யசோதையிடமும், யசோதைக்குப் பிறந்த யோகமாயா சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டனர்.

சிறையில் இருந்த பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் முயன்றபோது, அக்குழந்தை அன்னை ஆதிசக்தியாக மிகுந்த உக்கிரத்துடன் ஆகாயத்தில் எழும்பி, "உன்னைக் கொல்லப் போகும் கிருஷ்ணன் பிறந்துவிட்டான்" என்று எச்சரித்து மறைந்தது.

துர்க்கையாக அவதரித்த ஆதிசக்தி, உக்கிரம் தணிய தென்புலத்திற்கு வந்து உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் ஸ்ரீ பவானி என்ற பெயரில் அமர்ந்தாள். அவளோடு பரசுராமரின் தாயான ரேணுகாதேவியும் இங்கு வந்து அமர்ந்ததாகத் தல புராணம் கூறுகிறது.

'பாளையம்' என்றால் படை வீடு என்று பொருள். அன்னை பவானி தீமைகளை அழிக்க இங்கு ஒரு பெரிய படைவீடு அமைத்துத் தங்கியதால், இவ்வூர் பெரியபாளையம் என்று பெயர் பெற்றது.

மூலவரான பவானி அம்மன் தனது மேல் கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தையும், கீழ் கரங்களில் கத்தி மற்றும் அமுத கலசத்தையும் ஏந்தி வைஷ்ணவி தேவியாகக் கம்பீரமாகக் காட்சி தருகிறாள். அவளது மடியருகே தலை மட்டுமே கொண்ட சுயம்புவாக ரேணுகாதேவி அம்சமும் வீற்றிருக்கிறது

ஆதி காலத்தில் இப்பகுதி அடர்ந்த வனமாகவும், பெரிய புற்று மேடாகவும் இருந்தது. அன்னை நீண்ட காலம் புற்றினுள்ளேயே மறைந்திருந்தாள். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதிக்கு வளையல் விற்க வந்த வியாபாரி ஒருவரின் கனவில் அன்னை தோன்றி, தான் இப்புற்றில் வசிப்பதை உலகிற்கு உணர்த்துமாறு கட்டளையிட்டாள்.

அன்னையின் ஆணைப்படி ஊர்மக்கள் அந்தப் புற்றை அகழ்ந்து பார்க்க முயன்றபோது, கடப்பாரை பட்டு அங்கிருந்து ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. அங்கே அன்னை சுயம்புவாகக் காட்சி தந்தார். இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால், சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.

சிறப்பு

பக்தர்கள் வேப்ப இலைகளை ஆடையாக உடுத்தி, அங்கப்பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும். இங்கு வழங்கப்படும் குங்குமம் மற்றும் தீர்த்தப் பிரசாதம் மனித உடலில் உள்ள பல நோய்களைக் குணமாக்கும் உடற்பிணி தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது. தமிழ் மாதங்களான ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் இக்கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

நடைதிறந்திருக்கும் நேரம்

காலை 5 மணி முதல் 12.30 மணி வரை

மாலை 2 மணி முதல் இரவு 9 மணி வரை

X

Maalai Malar
www.maalaimalar.com