மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் வரலாறு

பூங்காவனம் என்ற இடத்தில் ஐந்து தலை நாகமாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரி தங்கினாள்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் வரலாறு
Published on

அங்காளம்மன் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சக்தி தெய்வங்களில் ஒருவராக வழிபடப்படுகிறார். இவர் பார்வதி தேவியின் உக்கிர வடிவமாகவும், கிராமங்களை காக்கும் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இத்தலத்தில் அம்மன் சுயம்புவாக அருள்பாலிக்கிறாள்.இக்கோவிலில் உள்ள சுயம்பு புற்று அம்மன் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.

இறைவன் : தாண்டேஸ்வரர்
இறைவி : அங்காளம்மன்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
தல விருட்சம் : வில்வம், மயில் கொன்றை

தல வரலாறு:

போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பரந்த பரப்பையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்ட காருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும்.

தண்டகாருண்ய பகுதிகளே சோழ மண்டலத்தில் தொண்டை மண்டலம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பராம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே மலையன் என்பவராவார். இவர் தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும்.

தண்ட காருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்கு மேல் மலைப்பகுதியைக் கொண்டதாகும். மேல் மலைப்பகுதியை ஆண்ட மலையன் என்பாரின் பெயராலேயே மலையன் ஊர் மலையனூர் என்ற காரணப் பெயரானது.

மேல்மலையனூரில் மலையன் ஆட்சி புரிந்த காலத்தில் ஏற்படுத்திய கோட்டை கொத்தளங்களின் அடிச்சுவடுகள் இருந்தன என்றும், மேல்மலையனூரில் ஒரு தெருவின் பெயர் கோட்டை மேட்டுத் தெரு என்று இருப்பது இதற்கு சான்றாக அமைகிறது.

ஒரு கால கட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மனைப் பூங்காவனத்தாள் என்று அழைத்து வழிபாடு செய்துள்ளனர்.

இதற்குச் சான்றாக அங்காளம்மன் பதிகத்தில் "பூங்காவில் ஊனுழலுரை ஓங்கார சக்தியே பூங்காவனத் தாயே" என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் பாடல் வரிகள் அமைந்துள்ளன. மேல்மலையனூரின் வடகிழக்குப் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அக்னி தீர்த்தம் என்ற திருக்குளம் அமைந்துள்ளது.

ஒருமுறை பிரம்மனின் அகந்தையை அடக்க, அவரது ஐந்தாவது தலையை சிவபெருமான் கொய்தார். இதனால் பிரம்மனின் தலை சிவனின் கைகளில் ஒட்டிக்கொண்டது. பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க பிச்சாடனராக உலகம் முழுவதும் பிச்சை எடுத்து திரிந்தார்.

இந்த கவலையில் பார்வதி தேவி பூங்காவனம் என்ற இடத்தில் ஐந்து தலை நாகமாக புற்று வடிவில் தங்கினாள். அங்கு சிவபெருமானின் கையில் இருந்த பிரம்மனின் கபாலத்திற்கு அந்தப் புற்றில் இருந்து தினந்தோறும் பார்வதி உணவு படைத்தாள்.

அப்போதும் பிரம்ம கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டிருந்தது. இதனை நீக்குவதற்காக பார்வதி தேவி உக்கிர வடிவம் எடுத்து அங்காளம்மனாக அவதரித்தாள். பின் தனது கூர்மையான நகங்களால் பிரம்ம கபாலத்தை சுக்குநூறாக உடைத்து சிவபெருமானின் தோஷத்தைப் போக்கினாள்.

மயான கொள்ளை:

பிரம்மனின் கபாலத்தை உடைத்த கோபம் தணியாமல் இருந்த அம்மனை, சிவபெருமான் சாந்தப்படுத்தினார். அன்று முதல் அம்மன் மயானத்தில் உள்ள தீய சக்திகளை அழித்து, பக்தர்களின் துயரங்களை நீக்குவதாக நம்பப்படுகிறது.

மாசி மாத அமாவாசையில் 'மயான கொள்ளை' திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

ஊஞ்சல் உற்சவம்:

அம்மாவாசையில் லட்சக்கணக்கில் இரவு முழுவதும் மக்கள் அம்மனை வழிபட இடகோவிலுக்கு வருவார்கள். மெங்கும் அன்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும்.

திருவிழாக்கள் தோறும் நள்ளிரவு 11.00 மணிக்கு அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது.

மாசி மாதம் மகா சிவராத்திரியன்று தொடங்கி 7-ம் நாள் தேரோட்டத்துடன் கூடிய பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com