

புது புது மக்களையும் அவர்கள் கலாச்சாரம், பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை, உணவு முறைகளை அறிய பலர் பயணிக்கின்றனர்.
அவ்வாறு பயணிப்பவர்களுக்கு சில நேரங்களில் அவர்களுக்கு தெரிந்ததில் இருந்து முற்றிலும் வினோதமான பழக்கவழக்கம், உணவு முறையை கண்டு அதிர்ச்சி ஏற்படலாம். இதனை கலாச்சார அதிர்ச்சி என்கிறோம்.
அவ்வாறு ஒரு கலாச்சார அதிர்ச்சியை வழங்கும் உணவுமுறை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பு என்றால் படையும் அஞ்சும். சாலையில் எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பை கண்டால் இதயத்தில் பெரும் படபடப்பு ஏற்படும். ஆனால் இங்கு ஒரு இடத்தில் பாம்பின் இதயத்தையே சாப்பிடுகிறார்கள். அதுவும் அந்த இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே.
அதீதமான சாகசத்தை தேடி அலைபவர்கள் எதிர்பார்த்துக்கிடக்கும் கடினமான சவால் இதுதான்.
வியட்நாமின் தலைநகரம் ஹனோய் -யின் புறநகரில் லாங் பெய்ன் மாவட்டத்தில் லே மாட் எனும் கிராமம் அமைந்துள்ளது. இதன் இன்னொரு பெயர் பாம்பு கிராமம்.
இங்கு பாம்பு பிடிப்பது, பாம்பு வளர்ப்பு மற்றும் பாம்பு உணவு வகைகளை சமைப்பது அம்மக்களின் நூற்றாண்டு கால வழக்கமாக உள்ளது.
ஜேக்சன் பெரர் என்ற பயணி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ மூலம் இந்த கிராமம் அண்மையில் வைரலானது.
பாம்பை சாப்பிடுவதில் மருத்துவ நன்மைகள் உள்ளதாக அம்மக்கள் நம்புகின்றனர். வைரலான அந்த வீடியோவில், ஜேக்சன் பெரர், லே மட் கிராமத்திற்கு செல்கிறார்.
அங்கு உணவகம் ஒன்றில் அனுபவம் வாய்ந்த உள்ளூர் நபர் முழு பாம்பை சமைக்க அதை வெட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது இன்னும் சமைக்கப்படாமல் பச்சையாக இருக்கும் அந்த பாம்பின் துடிக்கும் இதயத்தை எடுத்து ஜேக்சன் இடம் கொடுக்கிறார். இது அங்குள்ள உணவகங்களில் வழக்கமான ஒரு சடங்கு ஆகும்.
அந்த பாம்பின் இதயத்தை கையில் வாங்கிக்கொண்ட ஜேக்சன், "துடிக்கும் பாம்பின் இதயத்தை பச்சையாக சாப்பிட போகிறேன்" என கூறியவாறு அவர் அதை வாயில் போடுகிறார்.
அப்போது அவர் முகம் போகிற போக்கை பார்க்க வேண்டுமே.. தண்ணீருடன் அதை ஒரு வழியாக விழுங்கிய பின், " எனக்குள் இரண்டு இதயங்கள் துடிப்பை இன்னும் உணர்கிறேன்" என அவர் கூறுவது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
வீடியோவில் இடம்பெற்றுள்ள அந்த வகை பாம்பின் இதயம் மருத்துவ குணம் வாய்ந்தது என கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட ஜேக்சன், " இது என்னுடைய மருந்து, இது முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்த சிறந்தது" என கூறுகிறார்.
ஆனால் இதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை.