

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை பாரமவுண்ட் நிறுவனம் 110 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தும் முயற்சிக்கு தடைவிதிக்கக்கோரி அமெரிக்காவின் 12 மாகாணங்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன.
கலிபோர்னியா மாகாணத்தின் தலைமையில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், இந்த நிறுவனங்களின் இணைப்பு, திரையரங்குகள், கேபிள் விநியோகஸ்தர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இரு நிறுவனங்களும் மிகப்பெரியவை என்பதால், இந்த இணைப்பு மற்ற நிறுவனங்களை வளரவிடாமல், ஆரோக்கியமான போட்டியை முற்றிலுமாக அழித்து, நுகர்வோருக்கு படங்களின் தேர்வுகளை குறைப்பதோடு, கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கின்றனர்.
HBO Max, Paramount+, CNN, CBS போன்ற பல்வேறு முக்கிய ஊடகங்கள் ஒரே குடையின் கீழ் வருவதால், நுகர்வோருக்கான படங்களின் மற்றும் செய்திகளின் தேர்வுகள் குறையும்.
இந்த இணைப்பு நடந்தால், ஒன்றிணைந்த நிறுவனம் நாட்டின் அடிப்படை கேபிள் டிவி உரிமத்தில் 27 சதவீதத்தையும், திரையரங்குகளில் பெரிய அளவில் வெளியாகும் திரைப்பட விநியோகத்தில் 75 சதவீதத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.
அரிசோனா, கொலோரடோ, கனெக்டிகட், மாசசூசெட்ஸ், மினசோட்டா, நெவாடா, நியூ ஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூயார்க், ஓரிகன் மற்றும் வாஷிங்டன் ஆகிய மாநிலங்கள் வழக்கை தாக்கல் செய்துள்ளன.
இந்த வழக்கில் தீர்ப்பு வர சில மாதங்கள் ஆகும் என்பதால், அதுவரை ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கவும் பாரமவுண்ட் நிறுவனத்திடம் மாகாண அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
பாரமவுண்ட் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் எலிசன் இதற்கு இணங்கவில்லை என்றால், அவ்வாறு செய்யக் கோரி நீதிமன்ற உத்தரவைப் பெறுவோம் என்றும் மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
அக்டோபருக்குள் இந்த ஒப்பந்தம் முடிவடையாவிட்டால், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் 650 மில்லியன் டாலர் கொடுக்க பாரமவுண்ட் நிறுவனம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.