இளைஞர் தீக்குளிப்பு.. நேபாளத்தில் மீண்டும் வெடித்த ஜென் Z போராட்டம்.. பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்த கோபத்துடன், வீடற்ற ஏழைகளை நேபாள அரசு அவர்களின் தங்குமிடங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி வருவதும் சேர்ந்துகொண்டது.
பாலேந்திர ஷா
பாலேந்திர ஷா
Published on

நேபாளத்தில் மீண்டும் ஜென் இசட் தலைமுறையினர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2025 போராட்டம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய கம்யூனிஸ்ட் அரசு மற்றும் பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதில் முதன்மையாக இருந்தவர்கள் அந்நாட்டை சேர்ந்த ஜென் இசட் இளைஞர்கள்.

அரசின் ஊழல், அரசியல் தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றை எதிர்த்து நடந்த இந்த போராட்டத்தில் சர்மா ஒலி அரசு தூக்கியெறிப்பட்டது.

ஆட்சிக் கட்டில்

அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்க்கி தற்காலிக பிரதமராக இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 வயதேயான முன்னாள் மேயரும் ராப் பாடகருமான பாலேந்திர ஷா தலைமையிலான நேபாள சுவதந்திரா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

பாலேந்திர ஷா பிரதமராக பதவியேற்றார். இவர் கடந்த ஆண்டு ஜென் இசட் போராட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றிருந்ததே இவரின் மாபெரும் தேர்தல் வெற்றிக்கு காரணம்.

இந்நிலையில் அதே ஜென் இசட் இளைஞர்களின் எதிர்ப்பை ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்தே மாதங்களில் பாலேந்திர ஷா சந்தித்துள்ளார்.

தீக்குளிப்பு

தற்போது வெடித்துள்ள பிரச்சனைக்கு முக்கிய காரணம் 25 வயதுடைய கணேஷ் நேபாளி என்ற இளைஞர் தீக்குளித்து இறந்தது தான்.

படிப்பை முடித்துவிட்டு அரசுத் தேர்வுக்காகபடித்துக்கொண்டே, துபாய் வேலைக்காக காத்திருந்த கணேஷ் நேபாளி, குடும்ப வறுமை காரணமாக காத்மாண்டுவில் பகுதிநேர பைக் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த வாரம் அவரது மோட்டார் சைக்கிளைக் காத்மாண்டு மாநகராட்சி போலீசார் பறிமுதல் செய்து 1,000 நேபாள ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த கணேஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாஸ்போர்ட் அலுவலகம் அருகே போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, தனது பைக்கில் இருந்த பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது நேபாள மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த கோபத்துடன், வீடற்ற ஏழைகளை நேபாள அரசு அவர்களின் தங்குமிடங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி வருவதும் சேர்ந்துகொண்டது.

ஏழைகள் வெளியேற்றம்

அரசின் இந்த வெளியேற்ற நடவடிக்கையில் இதுவரை 2,600 குடும்பங்களைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்துள்ளனர்.

தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட ஏழை மக்கள் வசதிகள் செய்து தரப்படாததால் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

போராட்டம்

கணேஷ் நேபாளி தற்கொலை மற்றும் வீடற்றவர்கள் வெளியேற்றம் ஆகியவற்றால் கொந்தளித்த இளைஞர்கள் மீண்டும் வீதிக்கு வந்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

"ஏழைகளுக்கு எதிரான அத்துமீறலை நிறுத்து", "மனித உரிமைகளை மதித்திடு" போன்ற முழக்கங்களுடன் தலைநகர் காத்மாண்டுவில் அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள அரண்மனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலேந்திர ஷா அரசின் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

மீண்டும் ஜென் இசட்

கடந்த ஆண்டு செப்டம்பரில் அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஒலியைப் பதவி விலகச் செய்த அதே ஜென் இசட் அமைப்பினர் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

தற்காலிக முகாம்களில் உள்ள ஏழைகளின் நிலையை ஆய்வு செய்யச் சென்ற இளைஞர் நல ஆர்வலர்கள் மீது போலீசார் தடியடி நடத்திக் கைது செய்தனர். இதில் ஒருவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த விவகாரங்கள் குறித்து விசாரிக்க நேபாள அரசு, டிஐஜி கோவிந்த தபலியா தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com