

விஞ்ஞானிகளால் இன்னும் அடையாளம் காண முடியாத விசித்திரமான மர்மப் பொருட்களின் (UFO/UAP) புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தலைவர் ஜாரெட் ஐசக்மேன் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
உலகளவில் விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தகவல், 'தி ஜாக் கார்டன்' பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பேசியபோது வெளியானது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் 'பூர்சு' (PURSUE - Presidential Unsealing and Reporting System for UAP Encounters) என்ற திட்டத்தின் கீழ், பல ஆண்டுகளாக ரகசியமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த பறக்கும் தட்டுகள் மற்றும் விசித்திரப் பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்காகத் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
"எங்களிடம் உள்ள சில குறிப்பிட்ட புகைப்படங்களின் தரவுகளை வைத்து ஆய்வு செய்தபோதும், அதில் இருக்கும் விசித்திரப் பொருட்கள் என்னவென்று எங்களால் கண்டறிய முடியவில்லை. அவை முற்றிலும் விடைதெரியாத மர்மமாகவே நீடிக்கின்றன" என்று ஜாரெட் ஐசக்மேன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசு நிறுவனங்களின் கோப்புகளில் புதைந்து கிடந்த இந்தத் தரவுகளை வெளியே கொண்டு வர அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
நமக்கு இதை விரிவாக ஆராய நேரமில்லை; எனவே இதை மக்களிடம் கொடுத்துவிடுவோம், அவர்கள் என்னவென்று பகுப்பாய்வு செய்யட்டும்" என்ற அடிப்படையில் இந்த ஆவணங்கள் பொதுவெளியில் பகிரப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நாசாவிடம் மர்மப் பொருட்களின் புகைப்படங்கள் இருந்தாலும், அவை வேற்றுக்கிரகவாசிகள் அல்லது அவர்களது விண்கலங்கள் தான் என்பதற்கான நேரடி அல்லது உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று ஐசக்மேன் தெளிவுபடுத்தியுள்ளார்.
விழுந்து நொறுங்கிய விண்கலங்களோ அல்லது ஏலியன்களின் உடல்களோ அமெரிக்க அரசிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பென்டகன் பாதுகாப்புத் துறை அண்மையில் வெளியிட்ட 4-வது கட்ட ஆவணங்களில், கடந்த 1996-ஆம் ஆண்டு 'கொலம்பியா' விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் பூமியின் சுற்றுப்பாதையில் எடுத்த மர்மப் பொருள் ஒன்றின் அரிய புகைப்படங்களும் அடங்கும்.
நம் வாழ்நாளுக்குள்ளேயே விண்வெளியில் உயிரினங்கள் பரவலாக இருப்பதை மனிதகுலம் கண்டறிய மிக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்கான முதல் சான்றாக செவ்வாய் கிரகத்தில் இருந்து கொண்டுவரப்படும் சாம்பிள்களில் நுண்ணுயிரிகள் ( இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் நாசா தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.