லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து.. 50 பேர் மாயம் - உயிரிழப்பு என அச்சம்

ஜனவரி 1 முதல் மே 16 வரை 800க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

வட ஆபிரிக்க நாடான லிபியா அருகே மத்திய தரைக்கடலில் 60 அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுமார் 60 அகதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட படகு கடந்த செவ்வாய்க்கிழமை லிபியாவின் கிழக்குக் கடலோர நகரான தோப்ருக் அருகே உள்ள பர்தா தீவுக்கு அருகே கவிழ்ந்து விபத்து நேரிட்டுள்ளது.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படக் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர் என்று லிபிய கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கியவர்களில் 10 பேர் மட்டும் எப்படியோ நீந்திப் பர்தா தீவை அடைந்து உயிர் தப்பினர்.

கடலில் மூழ்கிய மற்ற அகதிகளைத் தேடும் பணிகளை லிபியக் கடலோரக் காவல் படையினர் தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

லிபியா - கடத்தல் புள்ளி

ஐரோப்பிய நாடுகளில் புதிய வாழ்வை தேடி மத்திய தரைக்கடலைக் கடக்க முயலும் அகதிகளுக்கு, லிபியா தொடக்கப் புள்ளயாக உள்ளது.

கடந்த 2011ல் நேட்டோ ஆதரவு பெற்ற புரட்சியின் மூலம் லிபியாவின் நீண்டகால அதிபரான கடாபி வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டார்.

அதன்பின்னர், அங்கு நிலவி வரும் அரசியல் குழப்பங்களையும் உள்நாட்டுக் கலவரங்களையும் கடத்தல்காரர்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வறுமை மற்றும் போர் காரணமாக ஓடிவரும் அகதிகளை ஐரோப்பாவிற்கு அனுப்பும் முக்கிய மையமாக லிபியாவை மாற்றியுள்ளனர்.

அதிக பணத்தைப் பெற்றுக்கொண்டு, தகுதியற்ற மற்றும் மிகவும் பலவீனமான சிறிய படகுகளில் நூற்றுக்கணக்கான அகதிகளை அடைத்து அனுப்புகின்றனர்.

இதனால் கடல் பயணத்தின்போது அடிக்கடி விபத்துகள் நேரிட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர்.

அகதிகள் பலி

சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 16 வரையிலான குறுகிய காலத்திற்குள் மட்டும், மத்திய தரைக்கடல் பகுதியில் 800க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு 1,300க்கும் அதிகமான அகதிகள் உயிரிழந்தது அல்லது காணாமல் போனது பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் கிழக்கு லிபியக் கடற்கரையில் நேரிட்ட மற்றொரு படகு விபத்தில் 51 அகதிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com