

ஈரான் திங்கள்கிழமை அமெரிக்காவுடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் லெபனானில் தனது இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மூன்று மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மேலும் சிக்கலாகியுள்ளன.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரானுக்கு எதிரான போர்நிறுத்த மீறல்களுக்கும், லெபனானுக்கு எதிராக ஜியோனிஸ்ட் ஆட்சி புரியும் மீறல்களுக்கும் அமெரிக்கா நேரடி பொறுப்பேற்றுள்ளது” என்று தெரிவித்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தள பதிவில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் தான் பேசியதாகவும், பெய்ரூட்டுக்கு எந்த படைகளும் அனுப்பப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்த பதிவில் அதிபர் டிரம்ப், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் எனக்கு மிகவும் பயனுள்ள உரையாடல் நடைபெற்றது. பெய்ரூட்டுக்கு எந்தப் படைகளும் செல்லாது. ஏற்கெனவே புறப்பட்டிருந்த படைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல், உயர் மட்டப் பிரதிநிதிகள் மூலம் ஹிஸ்புல்லாவுடன் நல்ல உரையாடல் நடைபெற்றது. அவர்கள் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த ஒப்புக்கொண்டனர்.
இஸ்ரேல் அவர்களை தாக்காது, அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள். அவர்கள் பேச விரும்பவில்லை என்றால் அது எனக்குப் பரவாயில்லை. நானும் அதிகம் பேச விரும்பவில்லை. நாம் அதிகமாகப் பேசுகிறோம்," என குறிப்பிட்டுள்ளார்.
தஸ்னிம் செய்தி நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தபடி, ஈரான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பரிசீலிக்கும் என்றும், உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்த இந்த முக்கிய கப்பல் பாதையை மூடுவதன் மூலம் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கத்துடன் பாப் எல் மண்டெப் நீரிணை உள்ளிட்ட பிற நீர்வழிகளையும் முடக்கும் என்றும் தெரிவித்திருந்தது.