

உலகில் இரண்டு சர்வதேச நீதி அமைப்புகள் உள்ளன. ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தின் கீழ் வரும் சர்வதேச நீதிமன்றம். இதன் கீழ் ஐநா உறுப்பு நாடுகள் அனைத்தும் வரும். மற்றொன்று சர்வ்தேச குற்றவியல் நீதிமன்றம்.
அந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடிப்படையாக அமைந்த ரோம் ஒப்பந்தம் 1998 ஜூலை 17ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் 123 உறுப்பு நாடுகள் உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
இனப் படுகொலை, மனிதக்குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், தேசிய ராணுவத்தைப் பயன்படுத்தி தேவையற்ற தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய 4 குற்றங்களை விசாரிக்க இந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது.
2010ஆம் ஆண்டு உறுப்பு நாடுகளின் கூட்டத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடித்தளமிட்ட, ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 17 ஆம் தேதியை சர்வதேச நீதி தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
சர்வதேச நீதிமன்றத்துக்கான தேவையை உணர்த்தவும், சர்வதேச நீதி என்பது என்ன என்ற புரிதலை உருவாக்கவும் இந்த தினம் உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஏற்காத நாடுகள் இத்தினத்தை அங்கீகரிக்கவில்லை.
ரோம் ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட 40 நாடுகள் கையெழுத்திடவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல், சூடான், ரஷியா ஆகிய நாடுகள் முதலில் கையெழுத்திட்டாலும் பிற்காலங்களில் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டன.
எனவே இந்த நாடுகள் எதுவும் தற்போது இதில் உறுப்பினர்களாக இல்லை.
இனம், மொழி, மதம், தேசம், வர்க்க வேறுபாடுகள் கடந்து நீதி என்பது அனைவரையும் சமானமாக புள்ளியில் நிறுத்தும் பதம் நீதி. மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி அது.
ஆனால் அது பெயரளவிலான விளக்கம். நடைமுறையில் நீதியை வழங்குவதில் இத்தனை தெளிவு உலகில் எங்கும் இல்லை.
நீதி நேர்மை, நியாயம் என ஒலிக்காத அரசியல் மேடைகள் இல்லை. ஆனால் அது பெயரளவிலாகவன்றி, உண்மையில் உள்ளத்தில் இருந்து பேசப்பட்டிருந்தால் இன்று உலகம் அனைவருக்குமான இடமாக இருந்திருக்கும்.
ஆனால் யார் எங்கு இருக்க வேண்டும் என சொல்லும் மனு நீதியைப் போல, இன்று சட்டத்தின் நீதியும் அதை இயக்கும் மனிதர்களால் பாரபட்சமாக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் நீதியின் வரையறைகள், விளக்கத்தில் பிரச்சனை இல்லை. அது அனைவருக்குமான நீதியை வலியுறுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை செயல்படுத்துவதற்கும் அதற்கும் இருக்கும் தூரம் சாலப் பெரிது.
நீதி வழங்கும் மன்றங்களும் நீதிமான்களும் நாடுதோறும் வேறுபடலாம். ஆனால் நீதியிலும் வேறுபாடு என்பது ஆபத்தானது.
ஒரு நாட்டின் நீதி மற்றொன்றை வஞ்சிக்கிறது. இதை களைய உருவானது சர்வதேச நீதி.
சம உலகு படைக்க சான்றோரால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச நீதிமன்றம் இன்று தன் செயல்பாட்டில் தொய்வை கண்டு வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசாவில் 72,000-க்கும் அதிகமானோரை கொன்று குவித்ததும் தற்போது சத்தமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்பும், உணவுப்பொருட்கள் செல்வதை தடுத்து மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சமும் இனப்படுகொலைக்கான திட்டமிட்ட நகர்வு என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம்சாட்டுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த போர் குற்றவாளி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.
ஆனால் அவரை பொறுத்தவரை இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் வலிமைமிக்க தேசத் தலைவர். இதுவே தேசங்களுக்கிடையிலான நீதிக்கும் சர்வதேச நீதிக்கும் இடையில் இருக்கும் முரண்.