காதலிக்கு மனைவியின் சடலத்தின் புகைப்படம்... அமெரிக்காவில் மனைவியை கொன்று நாடகமாடிய இந்திய பொறியாளர் சிக்கியது எப்படி?

அவினாஷின் மொபைல் போனில் இருந்த பிட்னஸ் செயலி முக்கிய ஆதாரமாக மாறியது.
 அவினாஷ் நார்னே
அவினாஷ் நார்னே
Published on

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் பெல்லிவ் நகரில் வசித்து வரும் தெலங்கானாவை சேர்ந்த 39 வயதான மென்பொருள் பொறியாளரான அவினாஷ் நார்னே, 34 வயதான தனது மனைவி ரஜிதா சபினேனியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் தகவல்படி, 2025 அக்டோபரில் அவர்களது அடுக்குமாடிக் குடியிருப்பின் குளியலறையில் ரஜிதா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

ஆரம்பத்தில், இந்த வழக்கு சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

சுமார் ஒன்பது மாத கால விசாரணைக்குப் பிறகு, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில், அவினாஷ் மீது காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

சிக்கியது எப்படி

அவினாஷ் சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டுத் திரும்பியபோது, ​​தன் மனைவி குளியலறையில் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டதாகக் கூறினார்.

இருப்பினும், அவர் இல்லாத நேரத்தில் வேறு யாரும் வீட்டிற்குள் நுழையவில்லை என்பதை அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஸ்மார்ட் லாக் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் பதிவுகள் காட்டின.

மேலும் அவரின் கைபேசிப் பதிவுகள், அழைப்பு விவரங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தரவுகளை வைத்து காவல்துறை விசாரணை நடத்தியது.

அவினாஷின் மொபைல் போனில் இருந்த பிட்னஸ் செயலி முக்கிய ஆதாரமாக மாறியது.

ரஜிதா இறந்ததாகக் கூறப்பட்ட நேரத்தில் அவினாஷின் இதயத் துடிப்பு மற்றும் உடல் இயக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததை அந்த செயலி காட்டியது.

விசாரணையின் போது, ​​அவினாஷ் இந்தியாவில் ஒரு பெண்ணுடன் திருமணத்திற்குப் பிறகும் தொடர்பு வைத்திருந்ததாகக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

தனது மனைவி இறந்த நாளன்று, அவினாஷ் அந்த பெண்ணுடன் பலமுறை பேசியதாக கூறப்படுகிறது.

கொலை நடந்த மறுநாள், அவர் தனது மனைவியின் சடலத்தை புகைப்படமாக எடுத்து அந்த பெண்ணுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இதை அவர் விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.

வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. அவினாஷ் தற்போது கிங் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.16.5 கோடி) செலுத்தி அவர் ஜாமீனில் வெளிவர நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com