வங்கதேசத்திலும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை கோரும் ‘பிராய்லர் கோழி’ கட்சி!

வங்கதேசத்தின் பல பகுதிகளில் கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும் என அரசு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
வங்கதேசத்தில் ‘பிராய்லர் சிக்கன் கட்சி’ போராட்டம்!
Published on

இந்தியாவில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளைப் போன்றவர்கள் என இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சித்திருந்தார்.

இதற்கு எதிர்த்து தெரிவித்து உருவான அரசியல் நையாண்டி இயக்கம்தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. ஆரம்பத்தில் இந்தக் கட்சியினை அனைவரும் கேலி, கிண்டலோடு பார்த்தாலும், தற்போது இக்கட்சி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என நடத்திவரும் போராட்டம் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இதேபாணியில் வங்கதேசத்திலும் இளைஞர்கள் எழுச்சியில் உருவாகி போராட்டம் நடத்திவருகிறது சிக்கன் பிராய்லர் கட்சி.

வங்கதேசத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு திட்டமிட்டப்படி உயர்நிலைக் கல்விக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்கா மற்றும் வங்கதேசத்தின் பிற பகுதிகளில் உள்ள மாணவர்கள் நேற்றுகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் எஹ்சனுல் ஹக் பண்ணைக் கோழிகள் என விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

அமைச்சரின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மாணவர்கள் சமூக ஊடகங்களில் 'பிராய்லர் சிக்கன் கட்சி' என்ற பெயரில் பக்கங்களைத் தொடங்கி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கினர்.

தங்களை அவமதித்த கல்வித்துறை அமைச்சர் எஹ்சனுல் ஹக் மிலோன் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்த சமூக வலைதளப் பக்கத்தினர் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

“நாங்கள் அவமதிக்கப்படவில்லை, விழிப்படைந்துள்ளோம்" என தொடங்கப்பட்ட இப்பக்கம், மிகக் குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com