சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீஸ்காரர்களுக்கு மனநல சோதனை

2020-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பால்துரை சிறையில் இருந்தபோது உயிரிழந்தார். இதையடுத்து 9 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீஸ்காரர்களுக்கு மனநல சோதனை
Published on

மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். 2 பேரும் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது நேர கட்டுப்பாட்டை மீறி கடையை திறந்து வைத்ததாக தந்தை, மகன் 2 பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு 2 பேரையும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தனர். போலீஸ் விசாரணையில் தந்தை, மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

இதில் சாத்தான்குளத்தில் அப்போது போலீஸ் இஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு இன்ஸ்பெக்டர் பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமிதுரை, முத்து ராஜா, செல்லதுரை, தாமஸ், பிரான்சிஸ், வெயில் முத்து ஆகிய 10 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

2020-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பால்துரை சிறையில் இருந்தபோது உயிரிழந்தார். இதையடுத்து 9 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி இந்த வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட் தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களது தண்டனை விவரம் வருகிற 30-ந் தேதி அறிவிக்கப்படும் என மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

தீர்ப்பின்போது கடந்த 5 ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். அவர்களது உடல்நலம் மற்றும் மனநலம் எப்படி? என்று தெரியவில்லை. எனவே அவர்களது உடல் மற்றும் மனநலம் குறித்து உரிய பரிசோதனை நடத்தி வருகிற 30-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ்காரர்களின் உடல்நிலை மற்றம் மனநிலை குறித்து பரிசோதனை செய்ய மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி அறை அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 9 போலீஸ்காரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com