ஆட்சியை பிடிக்க போவது யார்? மக்கள் தீர்ப்பு என்ன? உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் உதயசூரியன் உதிக்குமா? இரட்டை இல்லை துளிர் விடுமா? விசில் சத்தம் காதை பிளக்குமா? என்பதற்கு நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை விடை கிடைக்கும்.
ஆட்சியை பிடிக்க போவது யார்? மக்கள் தீர்ப்பு என்ன? உச்சக்கட்ட  பரபரப்பில் தமிழகம்
Published on

சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமருமா? இல்லை அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்குமா? என்பது போன்ற கேள்விகள் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதற்கிடையே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கடும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இணையாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இடங்களை பிடிக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்ததும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்து உள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் யார் வெற்றி பெறுவார்? என்கிற கேள்வி தமிழகம் முழுவதிலும் எதிரொலித்து வருகிறது.

சட்டமன்றத் தேர்தல் களத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பலத்த போட்டி நிலவுவதால் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை கணிக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இதற்கு முன்னர், தமிழகத்தில் நடைபெற்றுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் அடுத்து ஆட்சிக்கு யார் வருவார்? என்பதை தேர்தல் நேரத்திலேயே கணித்துவிடுவார்கள்.

வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வெளியாகும் கருத்துக்கணிப்புகளும் குறிப்பிட்ட கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்பதையும் தெரிவித்து வந்துள்ளன.

அதன்படி இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் எல்லாம் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகள்தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஓரளவுக்கு கணிக்க முடிந்திருக்கிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை நாளில் இந்த கட்சி தானே ஆட்சிக்கு வரப்போகிறது என்கிற மனநிலையில் மக்களும் இருப்பார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் இப்போது போல இதற்கு முன்பு இருந்ததே இல்லை. இந்த தேர்தலில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்பது கணிக்க முடியாத கணக்காகவே இருப்பதால் எப்போதும் இல்லாத வகையில், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ந்தேதியை எதிர்பார்த்து தமிழக மக்கள் உச்சக்கட்ட பரபரப்புடன் காத்திருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று சில கருத்துக்கணிப்புகளும், அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று சில கருத்துக்கணிப்புகளும் தெரிவித்துள்ள நிலையில், விஜய்யும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது தான் தேர்தல் களத்தில் குழப்பத்தை அதிகரித்து இருக்கிறது. இதனால் கருத்துக்கணிப்பு முடிவுகள் தங்களுக்கு கைகொடுக்குமா? இல்லை காலை வாரிவிடுமா? என்பது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறும்போது, எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தல் களத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களது பங்களிப்பை அதிகமாக செலுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால் அனைத்து கட்சித் தலைவர்களுமே முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்குமா? இல்லை ஏதாவது ஒரு வழியில் பாதகத்தை ஏற்படுத்தி விடுமா? என்கிற அச்சத்திலேயே உள்ளனர் என்றார்.

தமிழகத்தில் மீண்டும் உதயசூரியன் உதிக்குமா? இரட்டை இல்லை துளிர் விடுமா? விசில் சத்தம் காதை பிளக்குமா? என்பதற்கு நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை விடை கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com