

கரூரில் தவெக பொதுக்கூட்டத்திற்கு சென்றவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விபத்து ஒரு வருடத்தை நெருங்கவுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சந்தித்து, அவர்களுக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
தொடர்ந்து இன்று மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய முதலமைச்சர் விஜய், இந்த விபத்தில் காவல்துறையினரின் பங்கு முக்கியமானது என குற்றம் சாட்டியுள்ளார். விழா அரங்கில் காவல்துறையினர் குறித்து விஜய் பேசியதாவது;
“மக்களை சந்திக்கணும், மக்கள் பிரச்சினைகளை எடுத்து பேசணும் என்பதற்காக மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கி திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் என்று போய்க் கொண்டிருந்தோம்.
அரியலூரில் நிகழ்ச்சி முடித்துவிட்டு பெரம்பலூர் செல்வதற்கு முன்பு பெரம்பலூர் போலீசார் எங்களை அலர்ட் செய்தனர். கூட்டம் அதிகமாக இருக்கிறது. தாமதம் ஆகிவிட்டது, வராதீர்கள் என்றனர். போலீசார் சொன்னால் அதை கேட்டுதானே ஆகணும்.
பெரம்பலூர் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மன வலியுடன் சென்று விட்டேன். பின்னர் பெரம்பலூர் தொகுதி மக்களிடம் மன்னிப்பும் கேட்டேன். நாமக்கல் நிகழ்ச்சி முடிந்து கரூர் வரும் போது கரூர் போலீசார் எங்களை அலர்ட் செய்திருக்கலாம்.
எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை, வராதீர்கள் என்று கூறி இருக்கலாம். ஏதாவது தப்பாக தெரிந்தாலே போலீசார் நினைத்தால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யலாம். எங்களிடம் கேட்க வேண்டும் என்று அவசியமே கிடையாது.
அதை செய்யாமல் நெடுஞ்சாலையில் இருந்து நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு போலீசாரே எங்களை அழைத்துக்கொண்டு விட்ட நாடகம் இருக்கு பாருங்கள் . முழுசா நம்பி விட்டேன். நான் பேசும் போது போலீசாருக்கு நன்றி சொன்னேன்.
இப்படி ஒரு நாடகம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. இதற்கெல்லாம் யார் காரணம். இது யார் சொல்லி செய்தது? இப்படி பண்ணுங்கள், அப்படி பண்ணுங்கள் என்று உத்தரவு கொடுத்தது அழுத்தம் கொடுத்தது யார்?
அன்று கூட்டத்துக்கு தகுந்தாற்போல் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தார்களா? இந்த இடத்தை எடுத்துக் கொள்ள சொல்லி ஒரு போலீஸ் அதிகாரி பேட்டி கொடுக்கிறாரே? அதற்கு என்ன அர்த்தம்?” எனப் பேசியுள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு தவெக தரப்பினரும், எதிர்க்கட்சிகளும், மக்களும் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர்.
குறிப்பாக முதலமைச்சர் விஜய்யும், தவெகவினரும் பல்வேறு இடங்களில் இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக காவல்துறையினரையே குற்றம் சாட்டுகின்றனர்.
அப்போதைய திமுக அரசின் தூண்டுதலின்பேரில், இது நடந்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக காவல்துறையினர் பேசவோ, விளக்கமோ அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.