

விழுப்புரம்:
விழுப்புரம் தெற்கு நகர அ.தி.மு.க. செயலாளராக பசுபதி இருந்து வந்தார். திடீரென அவர் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பல ஆண்டுகளாக அ.தி.மு.க. சார்பாக நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற நான் கடுமையாக உழைத்துள்ளேன்.
தற்பொழுது விழுப்புரம் தெற்கு நகர செயலாளராக பணியாற்றி வருகிறேன். விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் என்னை விழுப்புரம் தெற்கு நகர அ.தி.மு.க.வில் பணி செய்ய விடாமல் பல்வேறு இடர்பாடுகளும் இன்னல்களும் செய்து வருகிறார்கள். இதனால் நான் பல ஆண்டுகளாக வகித்து வந்த விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பொறுப்பிலிருந்தும், அ.தி.மு.க.அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகிக்கொள்கிறேன்.
நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உண்மை விசுவாசியாக இருந்து பணியாற்றி கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த நிலையில் பசுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னை அ.தி.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டு ஓரம் கட்டி வருகிறார்கள். என்னோடு யாராவது தொடர்பு இருந்தால் அவர்களுக்கும் இடைஞ்சலை தருகிறார்கள்.
நான் எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன். குறிப்பாக என்னுடைய உயிர் மூச்சு உள்ளவரை அ.தி.மு.க.தொண்டனாக இருப்பேன். மேலும் வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பேன்.
நான் தி.மு.க. மற்றும் த.வெ.க .கட்சிக்கு செல்ல போகிறேன் என்ற தவறான வதந்தியை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.
எனது உடலில் உயிர் மூச்சு இருக்கும் வரை நான் அ.தி.மு.க.வின் தொண்டனாகவே இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.