விஜய்யின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர் - கள ஆய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1 கோடியே 34 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
MK Stalin - Vijay
Published on

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. பெரும்பான்மை பெறாமல் ஆட்சியை இழந்தது. இதை தி.மு.க.வினர் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கட்சியின் புலனாய்வு அறிக்கைகள் மற்றும் உளவுத்துறையின் தகவல்கள் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது பல மாவட்டங்களில் உள்ளூர் தலைமைகளின் அலட்சியம் தொண்டர்களை ஒருங்கிணைக்க தவறியது உட்கட்சி பூசல்கள், த.வெ.க. கட்சியின் எழுச்சியை மதிப்பிடத் தவறியது. செல்வாக்கு உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதது ஆகியவை தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது.

கள ஆய்வு குழு

இதனால் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 14-ந்தேதி 36 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளர்கள், இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் உள்பட பலரும் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள்- தொண்டர்களை தனித்தனியாக சந்தித்து கருத்துக்களை கேட்டு அறிக்கையாக தயாரித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

அதில் பல தொகுதிகளில் கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பில்லை என்று தெரிவித்தனர். தி.மு.க. உள்கட்சி பிரச்சனையை சரி செய்யவில்லை என்றும் செல்வாக்கு உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் ‘சீட்’ வழங்காமல் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு என்றும் சுட்டிக்காட்டினர்.

மகளிர் உரிமத்தொகை

தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்தது பெரும் தவறு என்றும் அதில் எடுத்து கூறியிருந்தார்கள்.

தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1 கோடியே 34 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் 2 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்த நிலையில் 1 கோடியே 34 லட்சம் பயனாளிகளுக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கியதால், உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

மேலும் தேர்தலுக்கு 2 மாதத்துக்கு முன்பு கோடைகால நிவாரணத்துடன் சேர்த்து ரூ.5 ஆயிரமாக வழங்கப்பட்ட தொகையுமே மகளிர் உரிமைத்தொகை பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைத்ததும் மற்றவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டு போட்டுள்ளனர்.

விஜய்யின் செல்வாக்கு

இது தவிர கோவில் அறங்காவலர் நியமனத்தில் உண்மையான தி.மு.க.வினர் புறக்கணிக்கப்பட்டு கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ஆளும் கட்சியாக தி.மு.க. இருந்தும் கூட்டுறவு சங்க தேர்தல், ஆவின் சங்க தேர்தல் நடத்தாததும் தி.மு.க.வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

த.வெ.க. தலைவர் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கினை கீழ்மட்ட அளவில் எடுத்து கூறியும் அதை மாவட்ட பொறுப்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை. விஜய்யின் செல்வாக்கை கட்சி தலைமை குறைவாக மதிப்பிட்டுள்ளது.

மேற்கண்ட பல்வேறு காரணங்கள் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாததற்கு காரணமாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com