

தமிழக அரசியலில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த தே.மு.தி.க.வின் வீழ்ச்சி பயணம் தொடர்கிறது. 2005-ம் ஆண்டு இருபெரும் அரசியல் தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராக அரசியல் களம் கண்ட விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சியை தொடங்கி வழி நடத்தினார்.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கிய தே.மு.தி.க. 10 சதவீதம் வரையில் வாக்குகளை பெற்றது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றார்.
2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் விஜயகாந்த் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வின் வளர்ச்சி அடுத்தக்கட்டத்துக்கு சென்றது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த தே.மு.தி.க. 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். இதுவே தே.மு.தி.க. பெற்ற பெரிய வெற்றியாகும்.
இதன் பின்னர் 2016-ம் ஆண்டு விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி அமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி தோல்வியை தழுவியது.
இதன் பின்னர் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தே.மு.தி.க. கடைசி நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறி டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்து அப்போதும் வெற்றியை கோட்டை விட்டது.
இந்த நிலையில் விஜயகாந்தின் மரணத்துக்கு பிறகு தே.மு.தி.க.வுக்கு தலைமை தாங்கிய பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தெளிவுப்படுத்தாமல் இழுபறி நிலையிலேயே வைத்து இருந்தார்.
அ.தி.மு.க.வுடன் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து இருந்த தே.மு.தி.க. மேல்சபை எம்.பி. கொடுக்காததால் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அப்போது தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க விரும்பினார். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. அப்போது பழம் நழுவி பாலில் விழும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
ஆனால் விஜயகாந்தோ தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விரும்பாமல் மக்கள் நல கூட்டணிக்கு தலைமை தாங்கினார். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தி.மு.க.வுடன் கைகோர்த்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். இது பிரேமலதாவின் மிகப்பெரிய அரசியல் வியூகம் என்று ஒருசிலர் கணித்தனர்.
தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்தது சமூக வலைதளங்களில் கடுமையாகவும் விமர்சிக்கப்பட்டது. விஜயகாந்தின் ஆன்மா பிரேமலதாவை மன்னிக்காது என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பலரும் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேசிய பிரேமலதா தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாக தெரிவித்ததும் திருமாவளவன் அவரை மேடையில் அறிமுகம் செய்தபோது எழுந்து வணக்கம் தெரிவிக்காமல் சிரித்தபடியே அமர்ந்து இருந்ததும் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்று இருந்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு குறைவான இடங்களே ஒதுக்கியதால் அந்த கட்சி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியது. ஆனால் புதிதாக சேர்ந்த தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. 10 தொகுதிகளை வாரி வழங்கியது.
இதுவும் கூட்டணிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது. இப்படி தே.மு.தி.க. தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தது முதல் கடுமையான சர்ச்சைகளும் நீடித்தது.
இந்த நிலையில்தான் தேர்தல் முடிவுகள் இந்த முறையும் தே.மு.தி.க.வுக்கு சாதகமாக அமையவில்லை. தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் விருத்தாசலத்தில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்று உள்ளது. பிரேமலதாவின் மகன் விஜயபிரபாகர் உள்பட 9 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.
இதன் மூலம் பிரேமலதாவின் அரசியல் வியூகம் புஸ்வாணமாகி இருப்பதாகவே சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. இந்த முறை தே.மு.தி.க. வெற்றி கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. நிச்சயம் எங்கள் கட்சி மீண்டும் எழுச்சி பெறும் என்று கூறி வந்த தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையான சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.