

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை. அ.தி.மு.க. இளைஞர்கள் என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இ.பி.எஸ். பேசினார் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அ.தி.மு.க. பலவீனமாகி விட்டது.
* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்.
* த.வெ.க. தலைவர் விஜய் கூட்டணி வருவார் என்றால் பா.ஜ.க.வை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார்.
* எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கி உள்ளார்.
* அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தற்போது பலமிழந்து காணப்படுகிறது. இந்த கூட்டணி வரும் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.