

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி வாரச்சந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வாரச்சந்தை கடந்த ஒரு ஆண்டாக ரூ. 2 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவடைந்தது. இதற்கிடையில் கடந்த ஒரு ஆண்டாக வாரச்சந்தை தனியாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்தது. தனியார் இடத்தில் பெரும் தொகையை செலவு செய்து சிறு வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட பேராவூரணி வாரச்சந்தை கடந்த 9-ம் தேதி பேரூராட்சியில் ஏலத்தில் விடப்பட்டது. கடந்த முறை 12 மாத காலத்திற்கு ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேல் ஏலம் விடப்பட்ட நிலையில், தற்போது 8 மாதத்திற்கு 21 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த நிலையில், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் வியாபாரிகளிடம் கூடுதலாக லட்சக்கணக்கில் முன்பணம் கேட்பதாகவும், வார வாடகையாக ரூ. 50, 100 கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது ஆயிரக்கணக்கில் வாடகையை உயர்த்தி கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த வாரம் முதல் தனியார் இடத்தில் நடத்தப்பட்டு வந்த வாரச்சந்தை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை புதிய சந்தைக்கு வியாபாரிகள் வந்தனர். ஆனால் புதிய சந்தை திறந்து விடப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் வாரச்சந்தை அருகே உள்ள பஸ் நிலையம் வாயிலில் இருபுறமும் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வியாபாரிகள் ஒன்று திரண்டு திடீரென சந்தையின் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கு வியாபாரிகளுக்கு எந்தெந்த கடை, எந்த இடத்தில் ஒதுக்குவது என்பது குறித்து பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்து வரும் போராட்டத்தால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.