TN Assembly Election| தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த தி.மு.க.வினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

TN Assembly Election| தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த தி.மு.க.வினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்
Published on
Summary

தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதா? என்று முதலில் பொதுவாக பேசினார்.

சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஒரு அணி, அ.தி.மு.க. தலைமையிலான ஒரு அணி, நடிகர் விஜய்யின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி கிட்டதட்ட உறுதியாகி விட்டது.

நாம் தமிழர் கட்சியை தவிர மற்ற கட்சிகளில் தொகுதி உடன்பாடு இன்னும் நிறைவடையவில்லை. இதற்கிடையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் கூட்டணி, தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் நடக்கும்போதே இன்னொரு பக்கத்தில் வேட்பாளர்கள் நேர்காணலும் நடந்து வருகிறது.

தி.மு.க.வில் வாய்ப்பு கேட்டு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் இன்று தொடங்கியது.

இதற்காக தமிழ்நாடு-புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தி.மு.க. தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் செலுத்தியவர்களை தொகுதி வாரியாக அழைத்து உள்ளார்கள்.

இதற்காக இன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பம் கொடுத்திருந்தவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர், முத்தியால் பேட்டை, உப்பளம், உழவர்களை உருளையன்பேட்டை, பாகூர் மண்ணாடிப்பட்டு, காமராஜ் நகர், நெல்லித்தோப்பு, காரைக்கால், மாகி, ஏனாம் உள்பட 30 தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தனர்.

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு வந்ததும் ஒவ்வொரு தொகுதியாக அழைத்து விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.

தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதா? என்று முதலில் பொதுவாக பேசினார்.

அதன் பிறகு கட்சியில் பணியாற்றிய அனுபவம், பற்றி கேட்டறிந்தார். தேர்தலில் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்? போன்ற பல்வேறு கேள்விகளையும் கேட்டார். இப்படி ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டறிந்தார்.

இந்த நேர்காணலில் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்களாக உள்ள கென்னடி, செந்தில்குமார், சம்பத், கோபால், காரைக்கால் நஜீம், காரைக்கால் நாக தியாகராஜன், நந்தா சரவணன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் தங்களை பற்றிய விவரங்களை ‘கோப்பாக’ தயார் செய்து வைத்திருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொருவரிடமும் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் முக மலர்ச்சியுடன் சென்று வந்தனர். எப்படியும் ‘சீட்’ கிடைத்து விடும் என்ற திருப்தியில் சென்றனர்.

புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து நாளை காலை தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, திருநெல்வேலி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.

நாளை மாலை மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு, தேனி வடக்கு தேனி தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.

அதன் பிறகு மார்ச் 19, 20, 21, 22-ஆகிய தேதிகளில் மற்ற தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com