

சென்னை:
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வது என்ற இலக்கை முன் வைத்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதற்காக 22 கட்சிகளை ஒருங்கிணைத்து ‘மெகா’ கூட்டணியை உருவாக்கி உள்ளார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, தே.மு.தி.க.-10, விடுதலை சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5, ம.தி.மு.க.-4, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும் எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
கூட்டணி கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றி ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
இதில் தி.மு.க. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை கொடுப்பது என்ற பட்டியல் நாளைக்குள் முடிவு செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிகிறது.
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தி.மு.க. வேட்பாளர் பட்டியலையும் வெளியிடுவார் என தெரிகிறது.
இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டம் மாவட்டமாக சென்று பிரசாரம் செய்ய இருக்கிறார்.
அதன் பிறகு 2-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் செல்கிறார். திருவாரூரில் திறந்த வேனில் சென்று மக்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம், சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதே போல் தி.மு.க. இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்ய இருக்கிறார். அவரது பிரசார சுற்றுப் பயண திட்டமும் தயாராகி வருகிறது.