சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்

தவறு செய்த எவர் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Minister Nirmal kumar
Published on

தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கைகோர்த்துக்கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற சதி செய்கின்றன.

பணத்தை வாரி இறைத்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க முயற்சி நடக்கிறது. அடுத்த ஒரு வருடத்தில் அதிமுகவும், திமுகவும் கட்சி நடத்த முடியாமல் பாஜகவுடன் கட்சியை இணைத்து விடும்.

சிறை மரணங்கள்

நாகர்கோவில் சம்பவம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதில் அரசு உறுதியாக உள்ளது. தவறு செய்த எவர் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.

பழனி நில விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பழனி நில மோசடி புகாரில் தவெகவினருக்கு தொடர்பு இல்லை. எந்த இடத்திலும் அரசு துணை போகவில்லை.

பத்திரப்பதிவுத்துறை புதிய மாற்றங்கள்

பத்திரப்பதிவுத் துறையில் முன்பு அமைச்சராக இருந்த மூர்த்தி 'மினிஸ்டர் கட்டிங்' என பணம் வாங்கினார்; ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆள்போட்டு 'மினிஸ்டர் கட்டிங்' என தொகையை வசூலித்தார் மூர்த்தி.

பத்திரப்பதிவுத் துறையில் திமுக ஆட்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு 9 மணி வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடைமுறைகள் தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இனி பத்திரப்பதிவு முறையில் முறைகேடு அல்லது ஊழலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒப்பந்தங்கள் ரத்து

தற்போதைய ஆட்சியில் பர்சன்டேஜ் கலாச்சாரத்திற்கு இடமில்லை. முந்தைய ஆட்சியில் திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.. முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com