

த.வெ.க.வின் வருகை அ.தி.மு.க.வில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தி.மு.க.வுக்கும், அதன் ஒட்டுக் கட்சிகளுக்கும் தான் பாதிப்பு என்றும் எடப்பாடி பழனிசாமி அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுவருகிறார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
சட்டமன்ற தேர்தல் பிரசார களத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது?
என் தலைமையிலான ஆட்சியையும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து எங்கள் ஆட்சியே சிறந்தது என மக்கள் எங்களுக்கு அமோக ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
210 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் வெல்வோம் என்கிறீர்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று சொல்கிறார். அதில் எதை எடுத்து கொள்வது?
கடந்த 5 ஆண்டுகள் நாட்டு நிலவரம் தெரியாமல் பொம்மையாக வலம் வந்து துண்டு சீட்டை படித்ததுபோல தேர்தல் கள நிலவரமும் அவருக்கு தெரியவில்லை. தி.மு.க. வேண்டாம் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதனால் 210 தொகுதிகளுக்கும் மேல் நாங்களே வெல்வோம்.
தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால் நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தி.மு.க. கூறுகிறதே? இந்த சூழ்நிலையில் மக்கள் எப்படி உங்கள் பக்கம் சாய்வார்கள் என்று எண்ணுகிறீர்கள்?
ஊழல் செய்வதற்கு ஏதுவாக திட்டங்கள் போடுவதில் வல்லவர்கள் தி.மு.க.வினர். அப்படிப்பட்ட திட்டங்களை மட்டுமே நிறைவேற்றி கோடி கோடியாய் கொள்ளை அடித்ததற்காக பல அமைச்சர்கள் வழக்குகளில் சிக்கி சீரழிவதை தான் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே.
எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட குடிமராமத்துத்திட்டம், ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத மருத்துவக்கல்வி ஒதுக்கீடு போன்ற பொதுமக்களுக்கான ஏராளமான திட்டங்களுக்கு நிகராக ஒரு திட்டத்தையாவது அவர்கள் நிறைவேற்றினார்களா?
எம்.ஜி.ஆர். காலந்தொட்டு எத்தனையோ தேர்தல் களத்தை பார்த்து இருக்கிறீர்கள். இப்போது நடக்கும் தேர்தல் கடும் சவாலாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகிய இருபெரும் ஆளுமைகளிடம் பயிற்சிப் பெற்றவர்கள் நாங்கள். எங்களுக்கு எந்தத் தேர்தலும் சவாலாக இருந்ததில்லை. நாங்கள் மக்களுக்காற்றிய நற்பணிகளுக்கு முன்னால் சவால்கள் சாதாரணமாகிவிடும்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என நீங்கள் தெரிவிக்கிறீகள். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று கூறுகிறார். உங்கள் கருத்து என்ன?
மு.க.ஸ்டாலின் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களை பார்ப்பதில்லை என்று தோன்றுகிறது. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் கலாசாரம் பெருகிவிட்டது. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி என்று நடைபெறாத நாட்களே இல்லை.
பள்ளி மாணவர்கள்கூட போதைக்கு அடிமையாகியுள்ள நிலையில், எதிர்கால தமிழகத்தை எண்ணி பார்க்கையில் மனம் அச்சப்படுகிறது. இதை இரும்புக்கரம் கொண்டு தடுக்கவேண்டிய அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துவிட்டது.
குறிப்பாக பல குற்றச்சம்பவங்களில் தி.மு.க. நிர்வாகிகளே ஈடுபடுவதால் காவல்துறை சுதந்திரமாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் குற்றங்கள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன.
தொலைகாட்சிகளில் தினசரி வானிலை அறிக்கை வாசிப்பதைப் போல் குற்றச் சம்பவங்கள், கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றி குறிப்பிடாமல் இருந்ததில்லை. கல்வி வளாகத்தில், வீட்டின் வெளியே விளையாடும்போது, கழிவறைக்கு செல்லும்போது, வீட்டின் மாடியில் படிக்கும்போது என்று தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் போலீஸ் காவலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதியும், நிவாரணமும் கிடைக்கவேண்டும் என எண்ணினேன். அது கிடைத்திருப்பது ஆறுதலாக உள்ளது.
10 தோல்வி பழனிசாமிக்கு, இந்த தேர்தலில் 11-வது தோல்வி கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசி வருகிறாரே?
அறிஞர் அண்ணா எழுதிய முன்னுரைக்கு மு.க.ஸ்டாலின் 2026 தேர்தலில் முடிவுரை எழுதி விடுவார். ஆனால் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வை யாராலும் அசைத்துக்கூட பார்க்கமுடியாது. இந்த பழனிசாமியைப் போல் ஒரு அடிமட்டத் தொண்டன்கூட தலைமைப் பொறுப்புக்கு வந்து கட்சியை வழிநடத்துவான்.
இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிரான, அதாவது அ.தி.மு.க.வுக்கு வரவேண்டிய ஓட்டுகளை த.வெ.க. பிரிப்பதால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு குறைகிறது என்று சொல்கிறார்களே?
த.வெ.க. வருகை அ.தி.மு.க.வில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எங்கள் ஓட்டு வங்கி முன்பைவிட அதிகரித்துள்ளது. த.வெ.க. வருகையால் தி.மு.க.வுக்கும், அதன் ஒட்டுக் கட்சிகளுக்கும் தான் பாதிப்பு.
தி.மு.க.வின் அராஜக ஆட்சியின் அவலத்தை த.வெ.க.வும் பொது வெளிக்கு கொண்டு வருவது எங்களுக்கே பலம். அதனால் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள்கூட அ.தி.மு.க.வே சிறந்தது என எங்களை நோக்கி அணி அணியாக வருகிறார்கள்.
நீங்கள் முதல்-அமைச்சரானால் போடும் முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கானதாக இருக்கும்?
சட்டம்-ஒழுங்கு சீரமைப்பு, பெண் குழந்தைகள், மகளிர் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி, ஏழை மக்களின் வாழ்வாதார உத்தரவாதம் என முக்கியத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழக அரசு ஏற்கனவே ரூ.10½ லட்சம் கோடிக்கு மேல் கடன் பட்டு இருக்கும் சூழலில், நீங்கள் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் தேவைப்படுகிறதே?
அரசுக்கு வருவாய் ஈட்டித் தரக்கூடிய ஆக்கப்பூர்வமான திட்ட செயற்பாடுகளும் இல்லாமல் ஒரு பொம்மை ஆட்சியால்தான் இத்தனைக் கோடிகள் கடன் சேர்ந்தது. வருவாய் ஈட்டும் திட்டங்களை உறுதிப்படுத்திக் கொண்டுதான் இந்த திட்டங்களை அறிவித்திருக்கிறேன். ஊழலையும், முறைகேடுகளையும் ஒழித்தாலே, இந்த திட்டங்களை நிறைவேற்றமுடியும்.
சிறப்பு உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம், எல்லோருக்கும் பிரிட்ஜ் என்று அறிவித்து இருக்கிறீர்கள். அதில் எதனை முதலில் நிறைவேற்றுவீர்கள்? குல விளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் தருவோம் என்று அறிவித்து இருக்கிறீர்கள்? அதனை எப்போது நடைமுறைப்படுத்துவீர்கள்?
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் மகளிர் நலன் காக்கும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் அரணாகத் திகழ்ந்தார். ஏழைப் பெண்களுக்குத் தாலிக்கு தங்கம், சீர்வரிசை, மகப்பேறு உதவி, பச்சிளங் குழந்தைகளுக்கு மருத்துவப் பெட்டகம் என அளப்பரிய திட்டங்களை செயல்படுத்தினார்கள். அதேபோல் தற்போது நாங்கள் அறிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தி.மு.க.வைப் போல் மக்களை ஏமாற்ற மாட்டோம்.
அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை தெற்கே சசிகலாவும், பா.ம.க.வின் வாக்கு வங்கியை வடக்கே டாக்டர் ராமதாசும் பிரிப்பார்கள் என கூறப்படுகிறதே?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்து, புரட்சித்தலைவி ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய பேரியக்கம் அ.தி.மு.க., எனவே யாராலும் இந்தக் கட்சித் தொண்டர்களை பிரித்து தன் வசப்படுத்த முடியாது.
அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் தி.மு.க. பக்கமும், சிலர் த.வெ.க. பக்கமும் சென்றுள்ளனர். இது அ.தி.மு.க. ஓட்டு வங்கியை பாதிக்குமா?
கட்சிக்கு துரோகம் இழைப்பவர்கள் விலக, விலக கட்சி கூடுதல் வலிமை பெறும்.